என் மலர்
சென்னை
- ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி!
- ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி! மக்களாட்சிக்கும் – மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்து உச்சநீ்திமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்களாட்சி, மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றுத்தந்த வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுகுறித்து நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:-
இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டி எல்லையில்லாத மகிழ்ச்சியோடு நாமெல்லாம் கூடியிருக்கிறோம்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை – ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு,போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை பர்த்திவாலா, மாண்பமை மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு – தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும் – மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி!
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி!
அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது" – "இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது" என்று மாண்பமை நீதியரசர்கள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியது!
ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை!
இந்த அரசியல் உரிமையை - சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்களால் இந்த விழாவிற்கு வர இயலவில்லை. அவர் இங்கு இல்லையென்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் - அபிஷேக் சிங்வி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - ராகேஷ் திவேதி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் - மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களைத் தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன்.
அறிவிற்சிறந்த வழக்கறிஞர் பெருமக்களே.....
உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள் – அமைப்புகள் – ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் – அனைத்து மாநில மக்களுக்கும் – மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி!
இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் – வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்! வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் - வாதிட்ட நீங்களும் - தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி!
இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக் கொடுத்ததுதான் "மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி" என்ற இலக்கு!
அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது! மாநில சுயாட்சியைப் பெறுவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்!
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமினா? அமைச்சர் பதவியா ? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சைவம், வைணவம் என குறிப்பிட்டு பெண்களை இழிவாக பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுத்லாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தயாளு அம்மாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சிகிச்சைக்குப்பிறகு அவர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், தயாளு அம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.
- சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் முடிவு.
எம்.சாண்டு, பி.சாண்டு வகை மணல் மற்றும் ஜல்லி விலையில் ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் முடிவு
- இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி.
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில், கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை, கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா?உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய எரிசக்தி இயக்குனரகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்த வெளி அனுமதி அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட 9-ஆம் சுற்று ஏலத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் 32485.29 சதுர கிலோமீட்டர் பரப்பளபில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும். இது சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் கட்டமாக தென் தமிழகத்தின் 9990.96 சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மீன் வளம் பாதிக்கப்படும் என்று மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.
- தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?
தெலுங்கர்கள் குறித்து தொடர்ந்து சீமான் அநாகரிகமாக பேசி வருவதாக தெலுங்கு முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் தெலுங்கு முன்னேற்றக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
* விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை சீமான் இழிவுபடுத்துவதை பொறுக்க முடியாது.
* சீமான் பாஞ்சாலங்குறிச்சி படம் எடுத்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது நாங்கள் தான்.
* அநாகரிகமாக பேசுவதை சீமான் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
* தெலுங்கர்கள் வேண்டாம் என்றால் தனது மனைவி கயல்விழியை வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா சீமான்?
என்று தெரிவித்தார்.
- காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும்.
- தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேருவோருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டு காலம் தகுதி காண் பருவமாகக் கருதப்பட்டும். இந்த காலத்தில் அவர்களின் நடத்தைக் குறித்து அவர்கள் வாழும் மாநிலங்களின் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால் உரிய காலத்தில் அந்த அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கையை தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஆட்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும். அதில் செய்யப்படும் தாமதத்தால் பணியாளர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் களைய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.
- நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்து மாண்பாளராக உயர்ந்தவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் என சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்து மாண்பாளராக உயர்ந்தவர். எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாத 'வெள்ளுடை வேந்தர்' எனப் பெயரும் பெற்றவர்.
இன்றைய நம் திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும்.
- 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம்.
சென்னை:
சென்னை வியாசர்பாடி பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் வாரம்தோறும் திண்ணை பிரசாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11-வது வாரமாக திண்ணை பிரசாரம் தொடர்ந்து வருகிறது.
இன்று விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்பது போன்ற அவலங்களில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணை பிரசாரம் நடத்துகிறோம்.
இந்த திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். 200 தொகுதிகளில் அ.தி.மு.க. வெல்வது நிச்சயம். சட்டசபையில் ஆளும் கட்சியினர் நேரலையில் பேசினால் தொழில்நுட்ப கோளாறு வருவதில்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் உடனே தொழில்நுட்ப கோளாறு வருகிறது. இது பாரபட்சமான நடவடிக்கை.
எடப்பாடி பழனிசாமி என்ன கேள்வி கேட்கிறார், என்ன மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார் என்று மக்களுக்கு தெரிந்தால்தான் அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.
ஊமை படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள். வடக்கு எது, கிழக்கு எது, தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார், 'உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்' என்றார்.
- ஜி.முத்து இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
- திருப்போரூர் பேரூராட்சிக் கழகம் பேரூராட்சி செயலாளராக கே.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே. சிவ ராமன், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே. பிரிதிவிராஜன். திருப்போரூர் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.முத்து இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும், திருப்போரூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க் காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் மாவட்ட துணைச் செயலாளராக ஜி.முத்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவராக கே. துரைமுருகன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்டச் செயலாளராக பி.ஏ.யாசர் அராபத், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மருத்துவ அணிக்கு மாவட்டத் தலைவராக டி.ராகுல், மாவட்டச் செயலாளராக டாக்டர் கே.பிரிதிவிராஜன், திருப்போரூர் பேரூராட்சிக் கழகம் பேரூராட்சி செயலாளராக கே.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது.
- பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 166 பயணிகளுடன் மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுதாரித்துக் கொண்ட விமானி ஓடுதளத்தில் பயங்கரமாக குலுங்கியபடி ஓடிய விமானத்தை, சாமர்த்தியமாக இயக்கி நிறுத்தினார்.
பின்னர், பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.
இதனால், 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






