என் மலர்tooltip icon

    சென்னை

    • விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்.
    • தற்போதுள்ள 25 கிலோ எப்.ஆர்.கே. சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி, நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து உள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.

    மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடம் இருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ.3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது.

    ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை), 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போதைய நெல் கொள்முதல் பருவத்தில் (31.08.2026 வரை) விற்பனைக்குரிய சந்தை உபரி நெல் 98.25 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி அடிப்படையில் இது 66.81 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இது தொடர்பாக, 8.8.2025 அன்று, கரீப் மார்க்கெட்டிங் சீசன் 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 20 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்குமாறு ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு முன் மொழிவு பரிந்துரைக்கப்பட்டது.

    தற்போது ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கே.எம்.எஸ். 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 31.3.2026 வரை 16 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் சாதனை அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கே.எம்.எஸ். 2025-2026-க்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலக்கை, கரீப் பருவத்தின் கடைசியில் கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவிற்கேற்ப உயர்த்தி திருத்தம் செய்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இரண்டாவதாக, காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை.

    கரீப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்.

    செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுப்பதில் தளர்வு ஆணைகள் கோரி மாநில அரசு, 07.10.2025 அன்று 5 ஒப்பந்ததாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு வழங்கியது. 16.11.2025 நில வரப்படி ஒப்பந்ததாரர்கள் 1,760 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, FoRTrace இணைய தளத்தில் 123 மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர். இதில் பதிவேற்றப்பட்ட 77 மாதிரிகளில், இதுவரை 33 மாதிரிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி முடிவை அறிவிக்க கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகின்றன. இந்தமுறை கால தாமதத்தை ஏற்படுத்தும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து பெறப்படும் கண்டுமுதல் அரிசியை நகர்வு செய்திடவும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சம்பா (ரபி) பருவ நெல் கொள்முதலுக்குத் தேவையான இடத்தினை ஏற்படுத்திடவும் அதிக அளவு செறிவூட்டப்பட்ட அரிசி அரவைக்குத் தேவைப்படுகின்றன.

    எனவே, தற்போதுள்ள 25 கிலோ எப்.ஆர்.கே. சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும். மாதிரி தொகுதி அளவை 10 எம்.டி.-இலிருந்து 25 எம்.டி ஆக பி.ஐ.எஸ். தரநிலைகளுக்கு (ஒரு தொகுதிக்கு 500 மூட்டைகள்) ஏற்ப அதிகரிக்க வேண்டும்.

    மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்து, இடப்பற்றாக்குறை நீங்கி, முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களில் இருந்து 7 நாட்களாகக் குறையும். இது தொடர்ச்சியான நெல் அரவைக்கு வழிவகுக்கும்.

    மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    இப்பரிந்துரைகளை பரிசீலனை செய்து நெல் அரவை ஆலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் விநியோகத்தினை எளிதாக்கத் தேவையான உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டும். இதன்மூலம் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கான காலம் கணிசமாகக் குறையும் என்றும், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி இவ்விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவுகளை எடுத்திட வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது.
    • காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதற்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உறுதி செய்திருக்கிறது.

    உச்சநீதிமன்றத்தில் மது வகைகளின் தரப்பெயர் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கண்ணாடி புட்டிகளிலும், காகிதக் குடுவைகளிலும் அடைக்கப்பட்ட மது வகைகளின் மாதிரிகள் நீதிபதிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மேல்சட்டைப் பைகளிலும், கால்சட்டைப் பைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக சிறிய காகிதக் குடுவைகளில் (டெட்ரா பேக்) விஸ்கி எனும் மது வகை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிர்ச்சியடைந்தார். மது வகைகள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

    ''இது மிகவும் ஆபத்தானது. இது பழச்சாறு அடைக்கப்பட்ட டெட்ரா பேக் போல காட்சியளிக்கிறது. இது குழந்தைகளின் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்" என்று நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்தார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி விடுத்த இந்த எச்சரிக்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும், மது வணிகத்தில் புதுமையை புகுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டில் டெட்ரா பேக்குகள் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்க முடிவு செய்திருந்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இப்போது தெரிவித்த இதே கருத்துகளை அப்போது வெளியிட்டு எச்சரித்த நான், காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். அதைத் தொடர்ந்து தான் அந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.

    ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சியின் எச்சரிக்கையையும் மீறி காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால், உச்சநீதிமன்றத்தால் இப்போது தெரிவிக்கப்பட்டதை விட மிக மோசமான கண்டனத்திற்கு ஆளாகியிருக்க நேரிடும். எது எப்படியிருந்தாலும் வருங்காலத் தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.
    • சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கோவையில் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார். 

    • வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
    • வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    * திராவிட மாடல் அரசில் வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

    * வ.உ.சி. பெயரில் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு.

    * கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி.யின் சிலை திறப்பு மற்றும் அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது.

    * கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு.

    * வ.உ.சி.யின் 150-வது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்.

    * வ.உ.சி.யின் 85-வது நினைவு நாள் 'தியாகத் திருநாள்'. தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்.

    * வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி.

    * வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் மற்றும் மடிப்பேடு வெளியீடு.

    * வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்.

    * 1908 திருநெல்வேலி எழுச்சிக்கு நினைவுச் சின்னம் அறிவிக்கப்பட்டது.

    தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான வ.உ.சி. பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன். வாழ்க வ.உ.சி.!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க. தேர்வு செய்த தேர்தல் ஆணையம் தான் தற்போது SIR-ஐ நடைமுறைப்படுத்தி வருகிறது.
    • லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம் உள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    * பாகநிலை முகவர், நாளொன்றுக்கு 50 படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க முடியும்.

    * தி.மு.க.வினருக்கு மட்டுமே கணக்கீட்டுப் படிவங்கள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறு.

    * பா.ஜ.க.வுக்கு சாமரம் வீச வேண்டும் என்பதற்காக மட்டுமே அ.தி.மு.க.வினர் SIR நடவடிக்கைக்கு ஆதரவளிக்கின்றனர்.

    * படிவங்களை பூர்த்தி செய்வதற்கு BLOக்களே திணறும் நிலையில் உள்ளனர்.

    * வாக்காளர் பட்டியலை முறைப்படுத்துமாறு 2004 முதல் தற்போது வரை தி.மு.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    * பா.ஜ.க. தேர்வு செய்த தேர்தல் ஆணையம் தான் தற்போது SIR-ஐ நடைமுறைப்படுத்தி வருகிறது.

    * முறையான வாக்காளர் பட்டியல் தேவை என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

    * ஒருநாள் நடைபெறும் தேர்தலுக்கு பார்த்து பார்த்து தேதி குறிக்கப்படுகிறது.

    * SIR-ஐ ஒரு மாத காலத்தில் முடிக்க வேண்டும் எனக்கூறுவது எப்படி நியாயம்?

    * வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணி.

    * பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பருக்குள் கணினிமயமாக்குவது சாத்தியமில்லை.

    * லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • களியக்காவிளை தகவல் மையத்தினை 9488073779, 948627 0443, 9442872911 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 27.12.2025 வரையும், மகர விளக்கு ஜோதி திருவிழா 30.12.2025 முதல் 19.1.2026 வரையும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.1.2026 வரை செயல்படும்.

    சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 9488073779, 948627 0443, 9442872911 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் செல்போன் எண்களிலும் தொடர்புகொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

    2.12.2025 வரை சிவக்குமார்-94439 94342, பிரேம் குமார்-6385806900, சந்தீப் குமார்-8531070571, 3.12.2025 முதல் 17.12.2025 வரை சேர்மராஜா-83440 21828, லால்கிருஷ்ணன்-70949 06442, சதீஷ்குமார்-75588 39969, 18.12. 2025 முதல் 2.1.2026 வரை சுந்தர்-89219 37043, சிவசங்கர்-9080650431, சஜ்ஜீவன்-99405 76898, 3.1.2026 முதல் 20.1.2026 வரை வெங்கடேஷ்-98433 70229, சுதாகர்-99425 05466, ரமேஷ்-84384 44770.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார்
    • கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரி யுவராஜ் மறைமலைநகர் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலைக்கு செய்வதற்கு முன்பு டி.ஜி.பி.க்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ள யுவராஜ், அதில் என் தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    மாநகர போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ. ஆக யுவராஜ் பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக யுவராஜ் கடந்த 12.8.2025 முதல் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    அவருக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் வேலைக்கு வரக்கூடாது என அதிகாரிகள் நிர்பந்தித்ததாகவும் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

    ஏ.இ. கோவிந்தராஜ், மற்றொரு அதிகாரி சொர்ணலதா இருவரும் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

    16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920

    13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-11-2025- ஒரு கிராம் ரூ.173

    16-11-2025- ஒரு கிராம் ரூ.175

    15-11-2025- ஒரு கிராம் ரூ.175

    14-11-2025- ஒரு கிராம் ரூ.180

    13-11-2025- ஒரு கிராம் ரூ.183

    • காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12608) வருகிற 23-ந் தேதி வரையும், காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12680) காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) 23-ந் தேதி அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12679) சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) 23-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16053) சென்ட்ரல்-அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) வருகிற 23-ந் தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
    • வடமாநிலங்களில் ஆதாரில் ‘இனிசியல்’ போட மாட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் அதில் விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதாவது ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே அதில் 'லாகின்' செய்ய முடிகிறது. செல்போன் எண் இல்லாதவர்கள், புதிதாக மனு செய்ய வேண்டி இருக்கிறது. பின்னர் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலை பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண் 'ஓ.டி.பி.' அங்கீகாரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு உங்களது பெயர் சரியாக இல்லை என்றே வருகிறது.

    இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரது பெயருடன் 'இனிசியல்' அல்லது தந்தை பெயரும் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய 'இனிசியல்' சேர்க்கப்பட்டு இருக்காது. தந்தை பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும். இந்த பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது.

    வடமாநிலங்களில் ஆதாரில் 'இனிசியல்' போட மாட்டார்கள். தந்தை மற்றும் சாதி பெயரை சேர்த்து மொத்தமாக இருக்கும். அல்லது தங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அதேபோலதான் வாக்காளர் அடையாள அட்டையிலும் தங்களது பெயர் மட்டுமே இருக்கும்.

    எனவே இந்த பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. மேலும் கனமழை பெய்து வருவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Electors Help Desk செயல்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் 18.11.2025 முதல் 25.11.2025 வரை வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் இதை அறிவித்துள்ளார். 

    கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×