என் மலர்
சென்னை
- ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை பலரும் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான்.
- பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால் அதனை வரவேற்கிறோம்.
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய், விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைக்க தவெக ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது. திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, திமுக மற்றும் பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்கும் விஜய், அதிமுக- வை விமர்சிக்காதது ஏன்? என்று அரசியல் நிபுணர்கள் முன் வைக்கும் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக பற்றி பேசிய விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன்? என தெரியவில்லை. த.வெ.க.வின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா?
* அதிமுகவை விஜய் விமர்சிக்கிறாரே தவிர கொள்கை எதிரியாக குறிப்பிடவில்லை என்றே தோன்றுகிறது.
* ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை பலரும் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான்.
* பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால் அதனை வரவேற்கிறோம் என்றார்.
- ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
- இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை:
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இம்மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன.
- ராபின் சர்மா தலைமையிலான குழு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கை கொடுத்த அமைப்பாகும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வியூகங்கள் வகுத்து வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக உள்ளன.
பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் சொந்தமாகவே கள ஆய்வு செய்து முடிவுகள் மேற்கொள்கின்றன. தி.மு.க. "பென்" எனும் அமைப்பு மூலம் கள ஆய்வு செய்து முடிவுகளை எடுத்து வருகிறது.
இது தவிர ஐபேக் மற்றும் ராபின்சர்மா தலைமையிலான இரு குழுக்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கள ஆய்வை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. ராபின் சர்மா தலைமையிலான குழு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு கை கொடுத்த அமைப்பாகும்.
அ.தி.மு.க.வும் சர்வந்த் தேவபக்தினி மற்றும் ஹரி கசவுல்யா ஆகியோர் கொண்ட குழு மூலம் 234 தொகுதிகளிலும் ஆய்வை நடத்தி வருகிறது. இந்த குழு அ.தி.மு.க.வுக்காக 200 பேரை களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு முதல் 11 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் இந்த குழுவின் ஆய்வுகள் மற்றும் வகுத்து கொடுத்த வியூகங்கள் வெற்றி தேடி கொடுத்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேர்தல் வியூகத்துக்காக குழு வைத்து இருப்பது போல புதியதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக வகுப்பாளராக சேர்த்துக் கொண்டார். சமீபத்தில் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் விஜய்க்காக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வந்தது. பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அந்த மாநில தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளார்.
ஜன் சுராஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எனவே தமிழகத்தில் விஜய்க்காக முழுமையாக செயல்படாத நிலையில் அவர் உள்ளார்.
வருகிற நவம்பர் மாதம் வரை அவர் பீகார் அரசியலில் கவனம் செலுத்துவார் என்று தெரிய வந்துள்ளது. எனவே விஜய்க்காக ஆலோசனை வழங்கும் பணிகளில் இருந்து அவர் தற்காலிகமாக விலகி உள்ளார்.
நவம்பர் மாதத்துக்கு பிறகு அவர் மீண்டும் விஜய்க்கு ஆலோசனை வழங்க வருவார் என்று தெரிகிறது.
- தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
- கூட்டணி அறிவிப்பின்போதே இ.பி.எஸ். முதலமைச்சராவார் என அமித்ஷா கூறிவிட்டார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
* தி.மு.க. அறிவித்து நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க உள்ளோம்.
* நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது தி.மு.க.
* மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டத்தின் பிரச்சனைகளை முன்னிறுத்தி மக்களை சந்திப்போம்.
* அ.தி.மு.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து விஜயிடம்தான் கேட்க வேண்டும்.
* கூட்டணி அறிவிப்பின்போதே இ.பி.எஸ். முதலமைச்சராவார் என அமித்ஷா கூறிவிட்டார்.
* தமிழக மக்களின் பேராதரவை பெற்று 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.
* நான் சிவகங்கை மாவட்டம் செல்லும்போது அஜித்தின் தாய், தம்பியை சந்தித்து ஆறுதல் கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல கல்லூரிகளில் ஓரிரு கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கணிசமானவை இன்னும் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்பக்கூடாது என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் வாய்மொழியாக ஆணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்ப அரசே தடை போடுவது எந்த வகையான சமூகநீதி? என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 03-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 25,345 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் கணிசமானவை பல்வேறு காரணங்களால் நிரம்பவில்லை. அவ்வாறு நிரப்பப்படாத இடங்களை இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், மற்றும் நான்காம் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்தி சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
அதன் பிறகும், மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருந்தால், பட்டியலின/பழங்குடியின ஒதுக்கீட்டு இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் பிற வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கான இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், பல கல்லூரிகளில் ஓரிரு கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் அந்த இடங்களில் சேரலாம் என்று காத்திருந்த மாணவர்கள் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு நினைத்தாலும் கூட அவற்றில் சேருவதற்கு மாணவர்கள் எவரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.
நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர குறைந்த எண்ணிக்கையில் 1.62 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு நினைத்தால் கடந்த காலங்களைப் போல 20% கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் இடம் வழங்க முடியும். ஆனால், விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களையே காலியிடங்களில் சேர்க்காமல், அவர்களை தனியார் கல்லூரிகளுக்கு விரட்டியடிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்தி, தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை அந்த சமுதாய மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வாய்மொழியாக தடை விதிக்கும் அதிகாரத்தை கல்லூரிக் கல்வி ஆணையருக்கு யார் வழங்கியது என்பதும் தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அடுத்த சில நாள்களுக்கும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் 7-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கும் நேற்று சவரனுக்கு 55 ரூபாய் குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400
03-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520
01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-07-2025- ஒரு கிராம் ரூ.120
03-07-2025- ஒரு கிராம் ரூ.121
02-07-2025- ஒரு கிராம் ரூ.120
01-07-2025- ஒரு கிராம் ரூ.120
30-06-2025- ஒரு கிராம் ரூ.119
- தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
- சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு தேவையற்ற பதற்றத்தை குறைக்க சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
- 2026 ஜனவரி மாதம் வரை நிர்ணயித்த இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. தேர்வர்களின் நலன் கருதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பணிகளை துரிதப்படுத்தி, கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது, 2026 ஜனவரி மாதம் வரை நிர்ணயித்த இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை.
சென்னை:
தஞ்சை மக்களே ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
- தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
- உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கலை அரசி, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனராக இருந்த சம்பத், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராகவும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்த மகேஸ்வரி, நில நிர்வாகம், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குனராகவும் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குனர் சரவணவேல்ராஜ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குராகவும், நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் இயக்குனர் சிவராசு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் செயலாளர் ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா.
- இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
சென்னை:
கிரிக்கெட் ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
டிரீம் நைட் ஸ்டோரீஸ் (DKS ) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்.
லோகன் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ரெய்னா நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை சிவம் தூபே வெளியிட்டார். அதன்பின், ரெய்னா வீடியோ கால் மூலம் நிகழ்வில் இணைந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதுதொடர்பாக, சுரேஷ் ரெய்னா கூறுகையில், தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகளில் இங்கு ஆடியிருக்கிறேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.






