என் மலர்tooltip icon

    சென்னை

    • டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.
    • மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இன்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

    1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த வெங்கட்ராமன் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியிருக்கிறார். மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.

    சேலம் சரக டிஐஜியாகவும் குற்றப்பிரிவு பெற்ற புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ள வெங்கட்ராமன் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும் இருந்துள்ளார். கூடுதல் போலீஸ் டிஜிபியாக சைபர் கிரைம் குற்ற பிரிவிலும், சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றிய வெங்கட்ராமன் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக பணிபுரிந்து வந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது.
    • விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.

    எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்நிலையில், சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.
    • மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த ஜூலை 14-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 04-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
    • நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.

    பா.ம.க.வில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 19-ந் தேதி பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.

    இன்றுடன் அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.

    இந்த நிலையில், இன்று சமூக ஊடகப் பேரவை கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து நிர்வாக குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் என 6 நாட்களுக்கு தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார்.

    மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

    சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசன் வீட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு வைக்கப்பட்டு இருந்த இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், இல.கணேசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    கடந்த 15-ந்தேதி உடல்நலக்குறைவால் இல.கணேசன் காலமானார். அந்நேரம் 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரசார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு இருந்தார். அதனால் இல.கணேசனின் மறைவுக்கு வரமுடியாத காரணத்தினால் இன்று இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். 

    • ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
    • ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது.

    தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ந் தேதி நான் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருகிறேன் என்றார்.



    இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது. அவர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், நீலகிரி, கோவை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.
    • சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், , கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.

    எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்நிலையில், இந்தாண்டு சென்னையில் முதல் மேகவெடிப்பு நிகழ்ந்ததாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது. பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

    • சென்னையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.
    • எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது;

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்து வருகிறது.

    எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.

    • மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன.
    • அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகனின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளி விவரங்களுடன் பலமுறை அறிக்கையாகத் தந்திருக்கிறோம்.

    அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

    முதலமைச்சர் தனது ஐரோப்பிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார். தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி இவை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர் நமக்கு எதிர்கட்சித் தலைவராக வாய்த்திருக்கும் அவல நிலையில், அவருடைய அறியாமை அறிக்கைக்கு பதிலளிப்பதைவிட, ஜெர்மனி- இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு இப்போது கவனம் செலுத்துகிறது.

    தான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப்பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.

    தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம் முதலமைச்சரின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்.

    அப்போது எதிர்க்கட்சித்தலைவருக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பும் நம் திராவிட மாடல் அரசில் சிறப்பாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும்.
    • ஏற்றுமதியாளர்கள் மீதான கடன் தவணை வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும்.

    டொனால்டு டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் பின்னலாடை ஏற்றுமதியில் சலுகைகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், "திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்கள் மீதான கடன் தவணை வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும். இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் கிட்டத்தட்ட 60 சதவீத பங்களிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், கடுமையான வரி உயர்வால் ஏற்படும் திடீர் போட்டித்தன்மை இழப்பை ஈடுசெய்ய இழப்பீடுகள் அல்லது ஏற்றுமதி ஊக்கத் தொகைகள் வடிவில் நிதி நிவாரணம் வழங்க வேண்டும். உற்பத்தியின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க பருத்தி நூலின் வரி விகிதங்களில் நிவாரணம் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
    • பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    சென்னை பெருநகர் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரும் போலியான URL Link-களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை பெருநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் IIFL Capital Ltd என்ற முதலீட்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக நிறைய புகார்கள் வந்துள்ளன.

    இந்த மோசடிகள் சமூக வலைதள விளம்பரங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, பிறகு போலியான முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி, பணத்தை செலுத்த தூண்டப்படுகின்றனர்.

    மோசடியாளர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு லாபம் வழங்குவதுபோல் குறைந்த தொகையை எடுக்க அனுமதித்து, நம்பிக்கை ஏற்படுத்தி பிறகு அதிக பணம் செலுத்தினால் மட்டுமே அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என்று வற்புறுத்தி மேலும் பணத்தை செலுத்த வைக்கின்றனர்.

    இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பும் வங்கி கணக்குகள் அனைத்தும் IIFL நிறுவனத்தை சாராத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப மோசடியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் எவ்வித SEBI விதிமுறைப்படி எந்தவொரு ரசீதோ. ஆவணமோ, ஒப்பந்தமோ தரப்படுவதில்லை.

    மேலும் IIFL Capital Ltd நிறுவனமோ அல்லது SEBI-யில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனங்களோ இதுபோன்ற குழுக்கள் அல்லது அங்கிகரிக்கப்படாத செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளமாட்டார்கள் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.

    எனவே இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சார்பில் பொதுமக்கள் அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்கள், போலியான முதலீட்டு செயலிகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மேலும், ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×