என் மலர்
சென்னை
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- சென்ட்ரல், எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேக வெடிப்பு காரணமாக நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தகது.
- சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35 வயது) த/பெ.அன்வர் என்பவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
- விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தி.மு.க. அரசு முருகன் மாநாடு நடத்தியபோது, அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது
தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது. இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள்.
தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், காமாட்சிபுரம் ஆதினம் இரண்டாவது குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
- மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.
இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.
கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
- உயர் அதிகாரிகள் பதவியை, அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு என்றார் அண்ணாமலை.
- பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என்னு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு.
மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. திரு. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.
ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இபிஎஸ் பிரசார பயணம் குறித்து பிரேமலதா விமர்சனம்.
- எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
இபிஎஸ் சுற்றுபயணத்திற்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்று உலகத்திற்கே தெரியும்.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.
நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் தொண்டர்களும், மக்களும் திரண்டு வருகின்றனர்.
எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்.
அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.
அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்-ன் மாண்பு பாதிக்கப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
சங்கர் ஜிவால் விடைபெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
- வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பாதிப்பிலிருந்து தமிழக ஏற்றுமதியாளர்கள் மீட்க நடவடிக்கை தேவை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள். இயந்திரங்கள். ரசாயனங்கள். மின்னணுப் பொருட்கள். கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள். லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும், அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும்.
வரி அதிகமான காரணத்தினால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும்.
இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.
இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள்.
இந்தக் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சிறிது காலமாகவே இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
வெளியுறவுக் கொள்கையில் ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்க முடியும் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.
'உலகளாவிய தெற்கின் குரல்' என்று ஒன்றிய அரசு பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த உடனே இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த அவசரத் திட்டமோ, நிவாரண நடவடிக்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல், 'முதலீட்டு உச்சி மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெற்று விளம்பரங்களோடு தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள், 50 சதவீத வரி விதிப்பால் பாதி வழியில் துத்துக்குடிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏனெனில் இதில் பாதிக்கப்படுவது தமிழக ஏற்றுமதியாளர்கள் தான்.
எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே, ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. தொழில் துறை, தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய ஒன்றிய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இரவு 10 மணி முதல் 12 மணி வரை குறுகிய நேரத்தில் அதிகமழை பெய்தது.
- பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. அதன்பிறகு சற்று ஓய்ந்திருந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. அதிலும் இரவு 10 மணி முதல் 12 மணி வரை குறுகிய நேரத்தில் அதிகமழை பெய்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, மேக வெடிப்பு காரணமாக சென்னையில் மழை பெய்ததாகவும், நேற்று இரவு 10 மணி முதல் 12மணி வரை பலத்த மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பம், இரவு நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை என்பது அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு பெய்த மழை குறித்து ஜெர்மனியில் இருந்து தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், மழையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்
பால் - ரூ.15
லெமன் டீ - ரூ.15
காபி - ரூ.20
ஸ்பெஷல் டீ - ரூ.20
ராகி மால்ட் - ரூ.20
சுக்கு காபி - ரூ.20
பூஸ்ட் - ரூ.25
ஹார்லிக்ஸ் - ரூ.25
பார்சல்
கப் டீ - ரூ.45
கப்-பால் - ரூ.45
கப் காபி - ரூ.60
ஸ்பெஷல் கப் டீ - ரூ.60
ராகி மால்ட் - ரூ.60
சுக்கு காபி - ரூ.60
பூஸ்ட் - ரூ.70
ஹார்லிக்ஸ் கப் - ரூ.70
ஸ்னாக்ஸ்
போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)
- வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவில்லை.
- பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொறுப்பைத் தட்டிக் கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை அவரே பலவிதங்களிலும் நிரூபித்து வருகிறார்.
அமெரிக்க அரசு தற்போது உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, இவர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சனைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.
* 365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த போதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவில்லை.
ஆனால், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வரிகளை உயர்த்தியும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், தொழில் முனைவோர்களையும், தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில், கையாலாகாத தி.மு.க. அரசு, திறனற்ற வகையில் செயல்பட்டதன் காரணமாக தொழில் துறை ஏற்கெனவே நலிவடைந்து ஸ்தம்பித்து உள்ளது.
இதன் காரணமாக, தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரிலும், பின்னலாடை நகரம் மற்றும் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும், வியாபாரங்களும் மெதுவாக தமிழகத்தைவிட்டு ஏற்கெனவே 2022 முதல் வெளியேறத் துவங்கி விட்டன.
அ.தி.மு.க. 2021, கொரோனா காலத்தில்கூட சிறப்பாக நடைபெற்று வந்த ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்கள், தற்போதைய விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், கடுமையான வரி உயர்வு மற்றும் தொழில் கொள்கையால் தள்ளாடி வருகிறது.
விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போடும் ஸ்டாலின், அமெரிக்காவின் தற்போதைய வரி உயர்வால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்து உள்ளதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். உண்மையில் இந்த விடியா தி.மு.க.வின் 52 மாத கால ஆட்சியின் அலங்கோல செயல்பாடுகளால் கோவை, திருப்பூரில் பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதே உண்மை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.
- மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
1994 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த வெங்கட்ராமன் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியிருக்கிறார். மதுரையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வு பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.
சேலம் சரக டிஐஜியாகவும் குற்றப்பிரிவு பெற்ற புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ள வெங்கட்ராமன் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும் இருந்துள்ளார். கூடுதல் போலீஸ் டிஜிபியாக சைபர் கிரைம் குற்ற பிரிவிலும், சிபிசிஐடி பிரிவிலும் பணியாற்றிய வெங்கட்ராமன் தற்போது நிர்வாகப் பிரிவு டிஜிபியாக பணிபுரிந்து வந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெறும் விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.






