என் மலர்tooltip icon

    சென்னை

    • தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
    • பணி நிரந்தரம் குறித்தவற்றை, அரசு ஊழியர்களுக்கான IFHRMS மென்பொருளில் இன்னும் திருத்தம் செய்யவில்லை.

    பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி அரசாணை எண் 19 வெளியிட்டது திமுக அரசு. ஆனால், இந்தப் பணி நிரந்தரம் குறித்தவற்றை, அரசு ஊழியர்களுக்கான IFHRMS மென்பொருளில் இன்னும் திருத்தம் செய்யவில்லை.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு, IFHRMS மென்பொருளில், பணியிடத்தின் தன்மை, தற்காலிகம் என்றே இருப்பதால், சுமார் 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவிலை. இது குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு என பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, அவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்துச் சிறிதும் அக்கறை இல்லாமல், கையாலாகாத நிலையில் இருக்கிறது திமுக அரசு. கல்வித் துறை அமைச்சரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனப்பான்மையில் இருந்து வெளியே வரவில்லை. தீபாவளிப் பண்டிகை நேரத்தில், ஆசிரியப் பெருமக்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அசிங்கம் என்பதை, முதலமைச்சரும், கல்வித் துறை அமைச்சரும் உணர்வார்களா?

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    • திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக.
    • தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான அதிமுக-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டும்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது:-

    மக்களால், மக்களுக்காக இயங்கும் ஒப்பற்ற இயக்கமாம் நம் அதிமுக-ன் துவக்க விழாவான இன்று, அண்ணா_வழி_திராவிடம் இணைய இதழின் அச்சுப் பிரதியை வெளியிட்டேன்.

    சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்களால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அதிமுக.

    ஆனால், நாம் உயர்த்திப் பிடித்த நம் உன்னதக் கொள்கையாம் திராவிடத்தை, தன் குடும்ப நலனைக் காக்கும் கவசமாக மாற்றிவிட்டது திமுக முதல் குடும்பம்.

    தீயசக்தி திமுக-வின் தந்திரங்களை, சூதுகளைத் தோலுரித்து, உண்மையான திராவிடத்தின் மாசற்ற வாரிசு அஇஅதிமுக தான் என்ற வரலாற்று பறைசாற்றும் வகையில், @AIADMKITWINGOFL தொகுத்துள்ள இந்த மாதம் இருமுறை இணைய இதழை கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் தவறாமல் படித்து, தங்களுக்காக எப்போதும் உழைக்கும் இயக்கமான அதிமுக-ன் புகழுக்கு மென்மேலும் வலுசேர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    • அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு செல்போன் தருவதாக கூறினார்கள், அதனை நிறைவேற்றினார்களா?
    • அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா?

    அதிமுகவை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    திமுகவை உருட்டுக்கடை அல்வா என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமியின் சேர்க்கை சரியில்லாததால் வாய்க்கு வந்ததை பேசுகிறார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.

    அதிமுகவை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார்.

    ஐவர் அணியாக இருந்த அதிமுக தற்போது இருவர் அணியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு செல்போன் தருவதாக கூறினார்கள், அதனை நிறைவேற்றினார்களா?

    அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எனவும் அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துக்கான ஆடைகளை வாங்கிவிட்டனர். அவர்கள் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சென்று கொண்டாட விரும்பும் மக்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 நாட்கள் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. மேலும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 4 நாட்களும் மொத்தம் 20,378 பஸ்கள் விடப்படுகிறது.

    இந்த சிறப்பு பஸ்கள் நேற்று முதல் புறப்பட்டு சென்றன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் புறபட்டு செல்கின்றன. இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள், 761 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,853 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1,28,275 பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன் 2,165 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,257 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இன்று சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை (சனிக்கிழமை) முதல் விடுமுறை தொடங்குகிறது. இதனால் கடைசி நேர நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன் அடிப்படையில் இன்று சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    மேலும் பொதுமக்கள் நேரடியாக சென்று, அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுஉள்ளன. இந்த முன்பதிவு மையங்கள் நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. இங்கும் பொதுமக்கள் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    வார இறுதி நாட்களான நாளையும், நாளை மறுநாளும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள் என்றும், கடைசி நேரத்தில் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் தனியார் ஆம்னி பஸ்கள் மூலமும் பயணிகள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு சென்றனர். தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனாலும் இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஏற்கனவே ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரெயில் பயணத்தையே முதலில் திட்டமிடுவது வழக்கம். தற்போது ரெயில்களில் பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. தீபாவளிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.

    இதையடுத்து தீபாவளிக்கு சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டன. அந்த ரெயில்களிலும் டிக்கெட் முழுவதும் நிரம்பிவிட்டது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 60 ரெயில்களில் பயணிக்க சுமார் 2.20 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மேலும் 35 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியும்.

    மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்றும் நாளையும் முன்பதிவு இல்லாத ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யவும் பயணிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

    இதுதவிர சென்னையில் வசிப்பவர்களில் பலர் கார்கள் உள்ளிட்ட தங்களது சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இன்றும் நாளையும் சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

    மேலும், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி நேற்று முதலே போலீசார் அறிவுறுத்திய பாதைகளில் சொந்த வாகனங்களில் சென்றவர்கள் பயணம் செய்தனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.

    • பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.

    அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன.
    • விவசாயிகளின் மறுவாழ்விற்கு எந்தவித மாற்று இடத்தை தராமல் இழப்பீடு மட்டுமே தர முன்வருவது ஏற்புடையது அல்ல.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், எச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன. இதில் 950 ஏக்கர் விவசாய நிலங்களை எச்சூர், பூதனூர் மற்றும் மேட்டுப்பாளையம் சிப்காட் திட்டத்திற்காக மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளன. அந்தப் பகுதி விவசாயிகளுக்கும் இது சம்பந்தமாக அறிவிப்புகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்கால வாழ்வாதாரம் குறித்து அச்சத்தில் உள்ளனர்.

    நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படும் இந்த காலத்தில், தமிழக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் மறுவாழ்விற்கு எந்தவித மாற்று இடத்தை தராமல் இழப்பீடு மட்டுமே தர முன்வருவது ஏற்புடையது அல்ல. ஆகவே எச்சூர் கிராமத்தில் விளைநிலங்களை கையகப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் உடனே கைவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    தொழில் வளர்ச்சிக்கு, விவசாயத்திற்கு தகுதியற்ற வறண்ட பகுதிகளில் கட்டுமானத்திற்கு தகுதியாக உள்ள இடங்களை தேர்வு செய்து, அந்தப் பகுதியில் சிப்காட் நிறுவனங்களை அமைக்க மாநில அரசு வழி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.
    • 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று வினா-விடை நேரத்தின் போது வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது:-

    காடந்தேத்தியில் ஆதீன மலையார் கோவிலுக்கு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்குண்டான போதிய இடவசதி இல்லை. இருப்பினும், அந்த கோவிலுக்கு சொந்தமான இடத்திலோ, மாவட்டத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சொந்தமான இடங்களிலோ ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குண்டான முயற்சியை துறை மேற்கொள்ளும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது சுமார் 70 சதவீதம் பக்தர்களின் வருகை கூடுதலாகி இருக்கின்றது.

    முதலமைச்சர், அந்த மாவட்டத்தின் அமைச்சர் வேலுவையும் அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை சபாநாயகர் பிச்சாண்டியையும், துறையின் அமைச்சரான என்னையும் 3 பேர் குழுவாக நியமித்து தினந்தோறும் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதன்படியே பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.

    அதேபோல பொதுப்பணித்துறை சார்பில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மேலும், கிரிவலப் பாதையில் சுமார் 12 இடங்களில் கழிப்பிட வசதிகள் பொதுப்பணித்துறை அமைச்சரின் முயற்சியால் சி.எஸ்.ஆர். நிதியுதவி மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட முதலமைச்சர், திருவண்ணாமலை கோவிலில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்ற வண்ணம் 7½ கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை தொடங்கி வைத்து இன்றைக்கு கோபுரங்கள் மின்னொளி பெற்று பிரகாசமாக இருக்கின்றது.

    அதோடு மட்டுமல்ல கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்ற போது நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு சுமார் ரூ.4.50 கோடி செலவில் கியூ வரிசை காம்ப்ளக்ஸ் ஏற்படுத்துகின்ற பணியும் தற்போது நடைபெற்று வருகின்றது.

    போர்க்கால அடிப்படையில் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக, ஒரு துறையாக இந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்திட்ட வரைவின் வாயிலாக கோவிலின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நாம் கூப்பிட்டது சபாநாயகருக்கு கேட்கவில்லை என்றனர்.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நாம் கூப்பிட்டது சபாநாயகருக்கு கேட்கவில்லை என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் இருக்கும் திசையை நோக்கி பார்த்தபடியே எனக்கு கேட்கவில்லை என்று நீங்கள் கூறியது எனக்கு கேட்டது. எனக்கு பாம்பு காது என்றார்.

    இது அவையில் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

    சென்னை:

    "ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும்" என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-

    கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் மிகத்தெளிவாக, துல்லியாக பதிலளித்து நம்முடைய நிதி அமைச்சர் சிறப்பாக இங்கே பேசியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் சிலர், ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்கு நான் இப்பேரவைக்குத் தங்கள் வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன்.

    'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண்!

    'சாதி யிரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என்கிறார் அவ்வை மூதாட்டி.

    இதுதான் தமிழர் தம் நெறியாகும். தமிழர் போற்றி வந்த பண்பாடு! இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது; உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது; மேல்-கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்து உள்ளன. அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இந்தச் சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள்.

    கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றை தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின; வாதாடின; மன மாற்றங்களை செய்தன. சாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள்.

    சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து வந்த அதே காலக்கட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த ஆட்சியை தமிழினத் தலைவர் கலைஞர் நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில் 'திராவிட மாடல்' ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம்.

    அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்தநாளிலும், அம்பேத்கர் பிறந்தநாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனையல்ல. தமிழ்நாடு சட்டப் பேரவை, இதே அவையில் 29-4-2025 அன்று உரையாற்றியபோது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இருக்கும் "காலனி" என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை "சமூக நீதி" விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.

    பிரதமர் சமீபத்தில் நேரில் சந்தித்து, முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்தேன். "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் 'இன்' என்பதற்குப் பதிலாக 'இர்' என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும் வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்பது தான் அந்தக் கோரிக்கை.

    சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம்-பொதுவுடமை-பொது உரிமை-கல்வி உரிமை-அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன் மூலமாகத் தான் சமத்தும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    ஆனால், இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவு மயமாகி வருகிறது. "ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?" என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வியாக அமைந்திருக்கிறது.

    எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது. கொல்வதை மட்டுமல்ல-பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட, வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.

    இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையைத்தான் நேற்றைய தினம் நமது உறுப்பி னர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

    சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

    ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்குச் சாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன்பொருட்டு நடந்தாலும், கொலை-கொலை தான். அதற்கான தண்டனைகள் மிகமிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

    யாரும் எவரும்-எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம். எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.

    அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னு டைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

    நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை; அனைவரும் சமம்; பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஒரு அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

    அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும்-சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும்-அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை! சீர்திருத்தப் பரப்புரையும்-குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

    இதுகுறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.

    இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • திமுக 2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வழங்கியது.
    • அதில் 10 சதவீதம் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2021 தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இன்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் உள்பட அங்கிருந்தவர்களுக்கு திமுக-வின் உருட்டுக்கடை அல்வா என எழுதப்பட்டிருந்த பாக்கெட்டை வழங்கினார்.

    மேலும், "திமுக 2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 10 சதவீதம் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எல்லோருக்கும் அல்வா கொடுத்திட்டாங்க. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். அத்துடன் ருசியாக இருக்கான்னு பார்த்து சொல்லுங்க" என்றார்.

    இந்த அரசாங்கம் மக்களுக்கு அல்வா கொடுத்து எப்படி ஏமாற்றுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். 

    • தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை.
    • மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி வருகிற 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

    நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    2 தினங்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

    • சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது.
    • பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சி இரு பிரிவாக உள்ளது.

    இதில் டாக்டர் ராமதாஸ் பக்கம் ஜி.கே.மணி, அருள் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அன்புமணி பக்கம் வெங்கடேசன், சதா சிவம், சிவகுமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் சட்டசபையில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முதல் வரிசையில் இருக்கிறார். அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அந்த இருக்கையில் வெங்கடேசனை அமர வைக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அன்புமணி தரப்பில் கடிதம் கொடுத்து இருந்தனர்.

    இந்த விவகாரத்துக்கு இன்று சபாநாயகர் விளக்கம் கொடுத்து உள்ளார். சட்டசபையில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள் பேசி முடித்த நிலையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கேட்டு எழுந்து நின்றனர்.

    சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:-

    சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது. இன்று பிரதான கட்சி ஜெயித்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி 24 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகமாக இருந்தால் கட்சி அங்கீகாரத்துடன் சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.

    அதைவிட கம்மியாக 8 உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் ஒரு குழுவாக, அணியாக இருப்பார்கள். இதுதான் சட்டமன்றத்தின் நடைமுறை. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும்தான் இருக்கையை எந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று பேரவை விதி சொல்கிறது.

    மீதிமுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அது சபாநாயகரின் முழு விருப்பம். அதன்படி நான் வைத்திருக்கிறேனே தவிர நினைத்தவுடனே எழுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என யாரேனும் கேட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

    பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர். இதில் இன்று நடைபெறும் விவாதத்திற்கு 2 பேர் எழுதி தந்தீர்கள். அதில் அருள், சிவகுமார் ஆகியோர் ஆகும். இதில் யாரை முதலில் கூப்பிடுவேன் என்றால் முதலில் எழுதி கொடுத்திருந்த அருளை கூப்பிடுவேன்.

    நேற்று நீங்கள் என்னிடம் எதுவும் எழுதி கொடுக்காததால் உங்களை பேச அழைக்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்சி தலைமையகத்தில் எழுதி கொடுத்த தீர்மானத்தை இங்கு கொடுத்து அதை செயல்படுத்த சொன்னால் அது தவறானது.

    இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

    இதை கேட்ட அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் எச்சரித்தார். உங்கள் பிரச்சனைகளை சட்டசபைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.எ.க்கள் 3 பேரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    ×