என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைவாக இயக்கப்படும்.

    அந்த வகையில், தீபாவளி பண்டிகையான வருகிற 20-ந்தேதி தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரெயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

    இதேபோல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
    • அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
    • பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

    சென்னை:

    தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசுக்கு சில கேள்விகளை கேட்டு இருந்தார். அதன்விவரம் வருமாறு:-

    * மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா?

    * NEP, இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?

    * உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?

    * புதிய ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரெயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?

    * மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்?

    * தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு?

    * 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே?

    * ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது.

    * ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?

    * நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நிதி அமைச்சர் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

    ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?

    நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

    ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

    பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

    இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

    கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

    இதற்கெல்லாம் பதில் வருமா?

    இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என்று வினவியுள்ளார். 



    • விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை.
    • அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

    மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்படுடையதல்ல. பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

    எனவே, "டெல்டாக்காரன்" என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,250-ம், சவரனுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து உள்ளது.
    • தங்கத்துக்குப் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை மூன்றாவது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது. தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவே மாறிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது. அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

    அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிரடியாக ஒரே நாளில் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இம்மாதத்தில் மட்டும் அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரையிலான கடந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,250-ம், சவரனுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து உள்ளது.

    இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு தங்கம் விலை இன்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,950-க்கும் சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது.



    தங்கத்துக்குப் போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை மூன்றாவது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் கிலோவுக்கு 13 ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600

    16-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,200

    15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880

    14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600

    13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-10-2025- ஒரு கிராம் ரூ.203

    16-10-2025- ஒரு கிராம் ரூ.206

    15-10-2025- ஒரு கிராம் ரூ.207

    14-10-2025- ஒரு கிராம் ரூ.206

    13-10-2025- ஒரு கிராம் ரூ.197

    • காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என தெரிவித்துள்ளது.

    அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    • மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.
    • கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்ற தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-திருச்சி (வண்டி எண்.06191), திருச்சி-தாம்பரம் (06190), போத்தனூர்-சென்டிரல் (06050), தாம்பரம்-கன்னியாகுமரி (06133), மதுரை-தாம்பரம் (06162), எழும்பூர்-மதுரை (06045), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), சென்டிரல்-போத்தனூர் (06049), மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 24 ரெயில்கள் இன்று இயக்கப்பட உள்ளது.

    19, 20 ஆகிய தேதிகளில்

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நெல்லை-மேட்டுப்பாளையம் (06030), நாகர்கோவில்-தாம்பரம் (06012), போத்தனூர்-சென்டிரல் (06044), நெல்லை-செங்கல்பட்டு (06154), செங்கல்பட்டு-நெல்லை (06153) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    * தாம்பரம்-நாகர்கோவில் (06011), தூத்துக்குடி-எழும்பூர் (06018), சென்டிரல்-கன்னியாகுமரி (06151), மேட்டுப்பாளையம்-நெல்லை (06029), செங்கோட்டை-தாம்பரம் (06014), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலம் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 23 ரெயில்கள் வருகிற 20-ந்தேதி இயக்கப்பட உள்ளது.

    20, 21 ஆகிய தேதிகளில்

    * எழும்பூர்-தூத்துக்குடி (06017), திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), நாகர்கோவில்-சென்டிரல் (06054), கன்னியாகுமரி- சென்டிரல் (06152), தூத்துக்குடி-எழும்பூர் (06018), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), போத்தனூர்-சென்டிரல் (06100), மதுரை-தாம்பரம் (06046), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 25 ரெயில்கள் வரும் 21-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    * திருச்சி-தாம்பரம் (06190), தாம்பரம்-திருச்சி (06191), சென்டிரல்-நாகர்கோவில் (06053), கோவை-திண்டுக்கல் (06139), திண்டுக்கல்-கோவை (06140), நெல்லை-செங்கல்பட்டு (06156), செங்கல்பட்டு-நெல்லை (06155), சென்டிரல்-போத்தனூர் (06043) மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்கள் செல்லும் ரெயில், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் ரெயில் என மொத்தம் 19 ரெயில்கள் வரும் 22-ந்தேதி இயக்கப்பட உள்ளன.

    தெற்கு ரெயில்வே முழுவதும் சிறப்பு ரெயில்களை பொறுத்த வரையில் கடந்த வியாழக்கிழமை 13 ரெயில்களும், நேற்று 24 ரெயில்களும் இயக்கப்பட்டு உள்ளது. இதேபோல, இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 110 ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 22-ந்தேதி வரையில் மொத்தம் 147 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
    • கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

    சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, நேற்று முன்தினம் ரெயில் மூலம் பலர் பயணித்த நிலையில், நேற்றும் ஏராளமானோர் ரெயில்களில் பயணித்ததை பார்க்க முடிந்தது. சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் வழக்கமான கூட்டத்தைவிட அதிக அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.

    முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முன்பதிவில்லாத பெட்டியில் மூச்சுவிடக்கூட இடம் இல்லாத சூழல் இருந்தது. நெரிசலில் நின்றுக்கொண்டே தொலைதூரப்பயணத்தை பலர் மேற்கொண்டனர். அதுவும் கடைசிநேர பயணத்தை திட்டமிட்டு வந்தவர்கள், ரெயில்பெட்டியில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூட்டை முடிச்சுடுகளுடன் வடமாநிலத்தவர்கள் ரெயிலில் ஏறி பயணித்தனர். அதிலும் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் அதிகம் பயணித்துள்ளனர்.

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, சென்னை எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை பயணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாளை கணக்கிட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும் சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று 4,257 பஸ்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் பஸ்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட பஸ்களில் ஏறிச்சென்றனர். முன்பதிவில்லாத சிறப்பு பஸ்களில் ஓடிப்போய் இடம்பிடித்தும், முண்டியடித்து ஏறியும் மக்கள் பயணித்தனர்.

    இதுதவிர ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து மக்கள் பயணம் மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 210 பேர் பயணித்ததாகவும், இன்றும், நாளையும் சேர்த்து சுமார் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளதாகவும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன் தெரிவித்தார்.

    சிலர் சொந்த கார்களிலும் பயணித்தனர். அதன்படி, அனைவரும் நேற்று காலையிலிருந்து தங்களுடைய காரில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலை, போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.

    இப்படியாக கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இன்றும், நாளையும் சேர்த்து எப்படியும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    மொத்தத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நேற்றுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையெடுத்துள்ளனர். இன்றும், நாளையும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

    ஒரே நேரத்தில் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை ஜி.எஸ்.டி. சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை.
    • சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்களின் நலன் கருதி அறிவிப்பு.

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி அன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் நலம் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
    • சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    தீபாவளி திருநாளை முன்னிட்டு, சென்னையில் இருந்து பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பாக பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்யும்படி முதலமைச்சர் உத்தரவிட்டபடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தும், கோயம்பேடு பேருந்து முனையத்தில் இருந்தும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். இன்று கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.

    தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021- 2023 வரை SC/ST மக்களுக்கெதிரான வன்முறை 68% அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
    • ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில் 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.

    இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு.

    இந்த நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக்குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?

    இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?.

    பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால் இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ×