search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி அணிக்கு பா.ஜ.க. ஆதரவு: அண்ணாமலை சூசக தகவல்
    X

    எடப்பாடி பழனிசாமி அணிக்கு பா.ஜ.க. ஆதரவு: அண்ணாமலை சூசக தகவல்

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது.
    • அண்ணாமலை ஏப்ரல் தொடங்கி 471 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.

    சென்னை :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதியன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வேட்பாளரை களம் இறக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்தனர்.

    இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு பா.ஜ.க. ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கப்படும் என்பதை அறிவிக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க. அறிவித்து இருந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக, அண்ணாமலை உள்பட மூத்த தலைவர்களை உள்ளடக்கிய பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கமலாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகி ஒருவர் கூறும்போது, "நம்முடைய (பா.ஜ.க.) இலக்கு 2024 பாராளுமன்ற தேர்தல்தான். அதற்காக கட்சியை நல்ல முறையில் வலுப்படுத்தவேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டிலும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்" என்றார்.

    ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி 471 நாட்கள் நடைபயணம் செல்கிறார். இதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் பா.ஜ.க. தலைமை தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேற்று மனு கொடுக்கப்பட்டது. இதேபோல, தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு குழுவினர் நாளை (வியாழக்கிழமை) டெல்லி செல்ல உள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த வக்கீல்கள் உடன், இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு கொடுக்க உள்ளனர்.

    Next Story
    ×