search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் மனு கொடுத்த காட்சி.
    X
    பொதுமக்கள் மனு கொடுத்த காட்சி.

    ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் மனு

    பச்சனம்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த 3 நாட்களாக  ஓமலூர் கருப்பூர், தாரமங்கலம் ஆகிய குரு வட்டத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட  கிராமங்களில் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதில் ஏராளமான பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து மனு கொடுத்தனர்.

    இதில் மேட்டூர் சப்-கலெக்டர் வீர் பிரதாப்சிங் கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். 

    பச்சனம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான காலியிடம் ஊர் விளையாட்டு மைதானமாக அதிகாரிகளால்  பயன்படுத்தப்பட்டு வந்தது. அனைத்து அரசு வருவாய் ஆவணங்களில் இந்த  நிலமானது அரசு புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பச்சனம்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியில் வசித்துவரும் ஒருவர் போலியாக ஒரு பட்டாவை தயார் செய்து வைத்து அந்த நிலத்தில் தற்போது வீடு கட்டி வருவதாகவும் உடனடியாக அந்த வீட்டை அகற்றி மீண்டும் விளையாட்டு மைதானமாக கொடுக்க வேண்டும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சின்னையன் தலைமையில் தி.மு.க. கிளைச் செயலாளர் கோவிந்தராஜ், ரவி, வெங்கடேஷ் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மனு கொடுத்தனர்.

    இதைப் பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் வீர் பிரதாப்சிங் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
    Next Story
    ×