search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கொரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்தினர் குறிப்பட்ட காலத்திற்குள் நிவாரணம் பெற அறிவுறுத்தல்

    கொரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்தினர் குறிப்பட்ட காலத்திற்குள் நிவாரணம் பெற வேண்டும் என்று சேலம் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    சேலம்:

    கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு  www.tn.gov.in இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 4,386 மனுக்கள் பெறப்பட்டு, 3,430 இனங்களுக்கு  ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 627 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி 20.3.2022க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள்  வருகிற 60 நாட்களுக்குள் (18.5.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

    மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். 

    இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

    எனவே கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.


    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×