search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்என் ரவி - முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    தமிழக கவர்னர் ஆர்என் ரவி - முதலமைச்சர் முக ஸ்டாலின்

    மகாத்மா காந்தி பிறந்தநாள்- தமிழக கவர்னர், முதலமைச்சர் மரியாதை

    காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    கதர் நூல்களால் ஆன மாலையும் ரோஜாப்பூ மாலையும் அவருக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது சிலையின் கீழ் பகுதியில் உருவப்படம் வைக்கப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.50 மணிக்கு அங்கு வந்தார். அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி 7.57 மணிக்கு வருகை தந்தார்.

    கவர்னரை, மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார். அதனைத் தொடர்ந்து சரியாக 8 மணிக்கு கவர்னர் ஆர்.என் ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

    தமிழக கவர்னர் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி

    அதனைத் தொடர்ந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருவரும் சென்னை சர்வோதைய சங்கம் சார்பில் நடந்த இராட்டை நூற்பு மற்றும் பக்தி பாடல் பஜனையை பார்த்து ரசித்தனர்.

    பின்னர் அங்கிருந்து இருவரும் பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆர்.காந்தி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சர்வோதய சங்க மாணவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி எம்.எஸ்.ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி மெரினா கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகில் மட்டும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது.

    அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மகாத்மா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×