search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    விவசாயிகளுக்கு தரமான விதை நெல் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வரகூரை சேர்ந்த விவசாயி வீரமணி தனது 9 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கரில் தனியாரிடம் இருந்து ஏ.டி. 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள 2 ஏக்கருக்கு, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும், தி.மு.க. அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்று விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

    பாதிப்படைந்துள்ள விவசாயி வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

    கோப்புபடம்

    எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×