search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தீப்பிடித்தது- பெண் உள்பட 2 பேர் கருகி பலி

    வல்லநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தீப்பிடித்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடியில் இருந்து நேற்று நள்ளிரவில் நெல்லை நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    வல்லநாடு அருகே உள்ள தெய்வச்செயல்புரம் நான்கு வழிச்சாலையில் வேன் வந்தபோது எதிரே நெல்லையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது.

    இதில் வேன் தீப்பற்றி எரிந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உள்பட 2 பேரும் அந்த தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வேன் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடானது. உடனே 2 பேர் உடலையும் போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீயில் கருகி இறந்த 2 பேரும் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த இடத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைத்தன. அதில் ஒருவரது பெயர் கணேஷ், சொந்த ஊர் மூலக்கரைப்பட்டி என்றும், மற்றொரு அட்டையில் உஷா, சொந்த ஊர் மூலக்கரைப்பட்டி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனால் இறந்தவர்கள் 2 பேரும் மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மூலக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர் அட்டையில் இருந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தபோது அங்கு அப்படி யாரும் இல்லை என்பது தெரியவந்தது.

    இதனால் தீயில் கருகி உயரிழந்த 2 பேர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சரியான பாதையில் சென்றுள்ளனர். ஆனால் வேன் டிரைவர் வேனை தவறான பாதையில் நெல்லையை நோக்கி ஓட்டி வந்துள்ளதாகவும், அதனால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் போலீசாரின் விசாரணையில தெரியவந்துள்ளது.

    Next Story
    ×