search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துர்கா  ஸ்டாலின்- மு.க.ஸ்டாலின்
    X
    துர்கா ஸ்டாலின்- மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்

    ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

    சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். 

    தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

    பதவி ஏற்பு விழாவுக்காக மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்குத் தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு முத்திரையுடன் கூடிய காரில் ஏறி கவர்னர் மாளிகை நோக்கி வந்தார். சரியாக 8.55 மணிக்கு ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேடையில் அமர்ந்த ஸ்டாலின், அமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்றபின் நடைமுறைகள் என்னென்ன என்று ஸ்டாலினிடம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் விளக்கிக் கூறினார்.

    சரியாக 9 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் அரங்கிற்கு காரில் வந்து இறங்கினார். கவர்னரை  திமுக தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஸ்டாலின் கவர்னருக்கு அறிமுகப்படுத்தினார். கவர்னர் பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்- மு.க.ஸ்டாலின்

    பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கவர்னருக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி  பூங்கொத்து அளித்தார். 

    தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நீர் பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார். க.பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
    Next Story
    ×