search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் முருகன் - குஷ்பு
    X
    எல் முருகன் - குஷ்பு

    நம்ம ஊரு பொங்கல் திருவிழா: எல்.முருகன்-குஷ்பு பங்கேற்பு

    ராமநாதபுரம், மதுரை மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டனர்.
    ராமநாதபுரம்:

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையின் சிறப்பை வெளி உலகிற்கு உணர்த்தவும், தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் வகையிலும் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியை பாரதிய ஜனதா நடத்தி வருகிறது.

    இன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் நம்ம ஊரு பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் ரெகு நாதபுரம் முத்துநாச்சியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

    விழாவில், தமிழகத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஆண்கள்-பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து சத்திரக்குடி அருகே உள்ள போகலூர் ஓட்டமடகாளியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியிலும் மாநிலத் தலைவர் முருகன் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

    முன்னதாக நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட அவரை கட்சியினர் மேள, தாளங்கள் முழங்க வரவேற்றனர்.

    தொடர்ந்து எல்.முருகன் கூறுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளே, தமிழர்களின் தலையாய திருநாள். விவசாய பெருமக்கள் கொண்டாடும் விழா.

    இந்தியாவின் இதயங்களான கிராமங்கள்தோறும் கொண்டாடும் விழா. சாதி-மத, இன பேதமற்ற தமிழ் சமூகமே ஒன்று திரண்டு கொண்டாடும் விழா. இந்த விழாவை சிறப்பாக நடத்தி தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் விதமாக நம்ம ஊரு பொங்கல் திருவிழா அமைந்துள்ளது என்றார்.

    மதுரை மாநகரிலும் பா.ஜ.க. சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாடப்பட்டது.

    தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு வாழைமரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    காலையிலேயே பெண்கள் திரண்டு வந்தனர். அவர்களுக்கு கரும்பு, பச்சரிசி மற்றும் பொங்கல் பானை வழங்கப்பட்டது.

    நம்ம ஊரு பொங்கல் விழாவில் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார். அவரது தலைமையில் பெண்கள் பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டை நினைவுகூரும் வகையில் மண்டபத்தில் ஜல்லிக்கட்டு காளை அழைத்து வரப்பட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் தமிழரின் பெருமையை நிலைநாட்டும் விளையாட்டுகள் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் நடைபெற்றன.
    Next Story
    ×