search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க தமிழ்செல்வன்
    X
    தங்க தமிழ்செல்வன்

    வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- தங்க தமிழ்செல்வன்

    வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    மதுரை:

    தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகளை சிறப்பாக செய்யவும் தேனி மாவட்டத்தை தெற்கு, வடக்கு என 2 மாவட்டங்களாக பிரித்து புதிய பொறுப்பாளர்களை கட்சி தலைமை அறிவித்தது.

    அதன்படி கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளை கொண்ட தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். போடி, பெரியகுளம் (தனி) ஆகிய 2 சட்டசபைகளை கொண்ட தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த தங்கதமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர், எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளை வகித்து வந்த தங்க தமிழ்செல்வன் ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அ.ம.மு.க.வில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது இவர் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாவட்ட பொறுப்பாளர் பதவியை தங்கதமிழ் செல்வன் எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் பிரிக்கப்பட்ட மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது.

    இதுகுறித்து தங்கதமிழ் செல்வன் “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

    மாவட்ட பொறுப்பாளர் பதவி தந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பிரிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் பதவி தந்ததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது முற்றிலும் தவறானது.

    மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மூத்த நிர்வாகிகளை நான் சந்தித்து வருகிறேன். பொதுமக்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவு உற்சாகத்தை அளித்துள்ளது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். தி.மு.க. வெற்றிக்காக நாங்கள் ஒற்றுமையாக இருந்து கடுமையாக உழைத்து மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்த்துவோம். தேனி மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி காட்டுவோம்.

    அ.தி.மு.க. ஆட்சி போனதும், கட்சி சிதறி உடையும். அ.தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பதவி ஆசைக்காக நடக்கும் சண்டையை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வருகிற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். சாதாரண தொண்டனை நிறுத்தினாலும் நாங்கள் கடுமையாக உழைத்து வெற்றிக்காக பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×