search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள்
    X
    விநாயகர் சிலைகள்

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு தடை விதித்தது வேதனை அளிக்கிறது- இந்து முன்னணி மாநில தலைவர்

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்தது வேதனை அளிக்கிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
    கோவை:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளதற்கு இந்து முன்னணி கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது. இதுவரை பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தபோதிலும் அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை இந்து முன்னணி முன்னெடுத்து வந்துள்ளது.

    தற்போது கொரோனா தொற்று காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி தயாராகி வருகிறது. கடந்த 5-ந் தேதி நடந்த கூட்டத்தில் அரசு தரப்பும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினார்கள். தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்தனை ஆர்வம் காட்டியது. அதற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவார்கள். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது.

    ஆனால் அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறது. ஒடிசாவில் ஜெகநாதர் தேர் திருவிழாவின் சிறப்பை உணர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி அளித்தது.

    ஆனால் தற்போது தமிழக அரசு இந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ, அதே போல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் தக்க முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 22-ந் தேதி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் திட்டமிட்டபடி பிரதிஷ்டை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×