search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின், கட்சியின் சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
    X
    மு.க.ஸ்டாலின், கட்சியின் சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

    2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: முதலமைச்சருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்

    மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு 2020-21-ம் ஆண்டுக்கான புதிய வரவு-செலவு திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 14.2.2020 அன்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் அதன் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் எல்லாம் உருவிழந்து, கொரோனா பேரிடரால் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது. இதனை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது. வேடிக்கையாகவும் இருக்கிறது.

    வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வரலாறு காணாத கடன் ஆகியவற்றின் கடும் பிடியில் மாநிலத்தை அ.தி.மு.க. அரசு சிக்க வைத்திருந்ததால் தற்போதைய கொரோனா அதை மேலும் சிக்கலாக்கி நிதிப்பேரிடரை உருவாக்கி, தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. இழந்த வரி வருவாயும் சீரழிந்த நிதி நிலைமையும் மேலும் கவலைக்கிடமாகி நிதிநிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் உயிர் பிழைக்குமா, இல்லையா என்ற நிலையில் இன்றைக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) இருக்கிறது. தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அனைத்து வருவாயையும் இழந்து வெறுங்கையராய் இருக்கிறார்கள்.

    மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 22.21 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 60 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடந்ததால், 1.42 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டார்கள். 35 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சோதனைச் சாகரத்தில் மூழ்கி வெளியே வர முடியாமல் திணறி நிற்கிறார்கள். இந்நிலையில் விவசாயிகளுக்கு மானியம், கடன் தள்ளுபடி, விவசாயம் செய்வதற்கு குறைந்தபட்ச மூலதனம், சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களை மீட்பது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி பண நிவாரணம் அளிப்பது, மிக முக்கியம். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியிலும் அ.தி.மு.க. அரசு முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை.

    இந்நிலையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மாநில அரசின் நிதி நிலைமை என்று திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே 2020-21-ம் ஆண்டுக்கு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கை, முற்றாக தோல்வி கண்டுவிட்டதால், நிச்சயம் மறுபரிசீலனை செய்திட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

    கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மாநிலத்தின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் முழுவதையும் மாற்றி அமைப்பது உள்ளிட்ட விசாரணை வரம்புகளுடன், ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் கடந்த 9-ந் தேதி ஓர் உயர்மட்டக் குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்திருக்கிறது என்றாலும், அந்த உயர்மட்டக்குழுவிடம் இடைக்கால அறிக்கை எதையும் அரசு கோரவில்லை.

    3 மாதங்களுக்குள் அந்த குழு அறிக்கை அளிக்கலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்று அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்குள் 2020-21-ம் நிதியாண்டின் 4 அல்லது 5 மாதங்கள் வீணாகி விடும். ஆகவே மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டும், பல தரப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினை கவனத்தில் வைத்தும், 2020-21-ம் ஆண்டுக்கான புதிய வரவு-செலவு திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த கட்டாயத்தைத் தட்டிக் கழித்துவிட முடியாது என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தக்க காலத்தே உணர்ந்து, தாமதியாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×