search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்- கே.எஸ்.அழகிரி கோரிக்கை

    மூடப்பட்ட மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 26 நாட்களாக நடைமுறையில் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டதாக காவல்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மன நிறைவை தருகிறது. பல ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தை கவ்விக்கொண்டிருக்கும் மது அரக்கனிடமிருந்து விடுபடுவதற்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    கொரோனா என்கிற கொடிய தொற்றுநோயை ஒழிக்க நாம் நடத்திக்கொண்டிருக்கிற கடுமையான போரைப்போல, மது அரக்கனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் ஒரு துளி மையை செலவிட்டு ஆணையில் கையொப்பமிட்டாலே தமிழகத்தில் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளை மே 3-ந்தேதியிலிருந்து மூடிவிடலாம்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நடத்துவதற்கு என்ன காரணம்? அதனால் மக்கள் பயன் அடைகிறார்களா? பாதிக்கப்படுகிறார்களா? குடிப்பழக்கத்தால் மக்கள் மனித வளத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முற்றிலும் அறிந்த ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துவது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக மதுப்பழக்கத்திற்கு ஏறத்தாழ ஒன்றரைக்கோடி பேர் ஆளாகியுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

    இவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சமூகத்தில் செயல்படுகிற மனிதர்களாக மாற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்திருக்கிறது. எத்தனை இலவச திட்டங்களோ, சமூக நல திட்டங்களோ நிறைவேற்றினாலும் அதன் மூலம் முழுமையாக பயன்பெறாமல் தடுப்பது பெரும்பாலான மக்களின் குடிப்பழக்கம் தான்.

    எனவே சமூகத்தில் புற்றுநோய்போல பரவிவரும் மதுப்பழக்கத்தில் இருந்து மது இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×