search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மாற்றுத்திறனாளி பெண்கள்-குழந்தைகள் இழப்பீடு திட்டத்துக்கு ரூ.5 கோடி வைப்பு நிதி: முதலமைச்சர் அறிவிப்பு

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகள் இழப்பீடு திட்டம் ரூ.5 கோடி வைப்பு நிதியுடன் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாசித்தபோது கூறியதாவது:-

    41 ஆயிரத்து 133 அங்கன்வாடி மையங்களில் சிறிய கட்டிட பராமரிப்புப் பணிகள், தச்சு வேலை, மின் மற்றும் பிளம்பிங் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    சென்னை, மைலாப்பூரில் 9 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமூக நல ஆணையரகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் “அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பக”த்திற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமும், குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பும், 10 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும்.

    சேலம் மாவட்டத்தில் தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அம்மாவின் அரசு, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் 1.31 ஏக்கர் நிலம் வழங்கி, 6.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி வசதியுடன் கூடிய சொந்தக் கட்டிடம் கட்டித் தரும்.

    பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்கிட ஏதுவாக, “மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020”க்கான நிதியம், 5 கோடி ரூபாய் வைப்பீட்டுடன் உருவாக்கப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Next Story
    ×