search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோக்கியராஜ்
    X
    ஆரோக்கியராஜ்

    உடுமலை மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது

    உடுமலை மூதாட்டி கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஆள்மாறாட்டத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஏரிப்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது 65). சம்பவத்தன்று இரவு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த தள்ளுவண்டியில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜோதி லட்சுமியின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்தார்.

    பின்னர் அந்த வாலிபர் வீடுகளுக்குள் புகுந்து அங்கு படுத்து இருந்த கலைவாணி, ராமன் என்பவரது மனைவி ஜெயலட்சமி (30) ஆகியோர் மீதும் கல்லை போட்டு தாக்கினார். பின்னர் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக டி.எஸ்.பி. ஜெய சந்திரன், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கலைவாணி, ஜெயலட்சுமி ஆகியோரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜோதிலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலையாளியை பிடிக்க திருப்பூர் எஸ்.பி. திஷா மித்தல் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ஜெய்சந்திரன் மேற்பார்வையில் உடுமலை இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதேபோன்று குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டது. உடுமலை சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம், முத்துகிருஷ்ணன், லிங்கேஸ்வரன், மவுலி ஆகியோர் அடங்கிய போலீசார் பல்வேறு கோணங்களில் கொலையாளியை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையாளி காயம் அடைந்த ஜெயலட்சுமியின் கணவர் ராமன் என்பவரிடம் பெயிண்டிங் வேலை செய்து வந்த ஆரோக்கியராஜ் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து ஆரோக்கியராஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    சம்பவத்தன்று ஜெயலட்சுமியின் கணவர் ராமுவுடன் பெயிண்டிங் வேலைக்கு சென்றேன். வேலையின்போது ராமு என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால் நான் மனவேதனை அடைந்தேன். எனவே ராமுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி தள்ளுவண்டியில் ராமு தான் படுத்திருப்பார் என்று நினைத்து கல்லை தூக்கி தலையில் போட்டேன். ஆனால் பெண் குரல் கேட்டதால் அது ராமு இல்லை என்று தெரிந்து கொண்டேன்.

    பின்னர் ராமு வீட்டிற்குள் படுத்து இருக்கலாம் என நினைத்து உள்ளே சென்றேன். அப்போது அங்கு 2 பேர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அது ராமாக இருக்கலாம் என நினைத்து 2 பேரையும் கல்லால் தாக்கினேன். அப்போது அவர்கள் 2 பேரும் பெண்கள் என்பது தெரிய வந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போட்டனர். இதனையடுத்து நான் அங்கு இருந்து தப்பிச் சென்றேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×