search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு ஒதுக்கீடு செய்த புதிய வீட்டின் முன்பு ஆர்.நல்லக்கண்ணு.
    X
    தமிழக அரசு ஒதுக்கீடு செய்த புதிய வீட்டின் முன்பு ஆர்.நல்லக்கண்ணு.

    நல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
    தமிழகத்தில் தற்போது எளிமையான அரசியல் தலைவர்கள் அதிகம் பேர் இல்லை. அன்றாட அடிப்படைத் தேவைகளைக் கூட, சாதாரண உடை, அதிக செலவில்லாத போக்குவரத்து, எளிமையான வசிப்பிடம் என்று சுருக்கி அமைத்துக் கொண்ட தற்போதுள்ள அரசியல்வாதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 95) முதல்வராக இருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு விழா ஒன்றில், அவர் சார்ந்த கட்சியில் இருந்து அவருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கியபோது அதை அந்தக் கட்சிக்கே அதே மேடையில் திருப்பிக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சுற்றுப்புறசூழல் பாதிப்புகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு, பசுமைத் தீர்ப்பாயம் போன்றவற்றில் வழக்குகள் தாக்கல் செய்து நல்ல தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

    நல்லகண்ணு பல ஆண்டுகளாக தியாகராயநகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினரும் அங்கு வசித்து வந்தனர். அந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 1953-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். எனவே மிகவும் பழுதாகி இருந்த அந்தக் குடியிருப்பில் வசித்தவர்களுக்கு சீரமைப்புப் பணிகளுக்காக குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வெளியேறும்படி அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு அரசு வேறு வீடுகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நல்லகண்ணு தாமாகவே வீட்டை காலி செய்வதாகக் கூறி வெளியேறினார். மேலும், தனக்கு வீடு ஒதுக்கித் தராவிட்டாலும் கக்கனின் குடும்பத்தினருக்கு வேறு வீட்டை ஒதுக்கித் தரும்படி தமிழக அரசை நல்லகண்ணு கேட்டுக் கொண்டார்.

    இதற்கிடையே நல்லகண்ணுவிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வேறு இடத்தில் வீடு ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார்.

    அதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணுவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், நல்லகண்ணு தனது ஆயுள் காலம் முழுவதும் வாடகை இல்லாமல் குடியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் லோட்டஸ் காலனி 3-வது தெருவில் நல்லகண்ணுவுக்கு தனி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    தனது 2-வது மகள் டாக்டர் ஆண்டாள் குடும்பத்தினருடன், சென்னை கே.கே.நகரில் வசித்து வந்த நல்லக்கண்ணு நேற்று தமிழக அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் குடியேறினார்.

    நல்லகண்ணு

    தமிழக அரசு வீடு ஒதுக்கீடு செய்தது குறித்து ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:-

    சென்னை நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஹால், 2 படுக்கை அறை, சமையல் அறை ஆகியவற்றை கொண்ட வீடு தமிழக அரசால் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் அரசு வீட்டில் இருந்து கொள்ளலாம் என்றும், வாடகை எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்காக தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான், ஏற்கனவே வசித்து வந்த வீட்டில் இருந்து அரசு என்னை வெளியேற்றிய போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். எனக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனது பொது வாழ்க்கை பல்வேறு கரடு முரடான பாதைகளை கொண்டது. இருந்தபோதிலும் நேர்மை தவறியது இல்லை. தமிழக அரசு வீடு ஒதுக்கி இருப்பது எனது பொது வாழ்க்கைக்கும், நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன். என்னிடம் 2 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் இல்லாமல் என்னால் ஒரு நாள் பொழுதை கூட கழிக்க முடியாது. இதனால், இந்த வீட்டுக்கு வந்த உடன் எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்தாச்சா? என்று என்னோடு வந்தவர்களிடம் கேட்டேன்.

    புத்தகங்கள் படிக்கும்போது எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக புத்தகங்களை வைப்பதற்காக தனி அறை ஏற்படுத்தி வருகிறேன். எப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் புத்தக அறைக்கு சென்று படிக்க திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் குடியேறிய ஆர்.நல்லக்கண்ணுவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சிலர் புத்தகத்துடன் பேனா அடங்கிய பாக்கெட்டுகளை பரிசாக கொடுத்தனர். அதற்கு நல்லக்கண்ணு, இதெல்லாம் எதற்கு என்று கேட்டார்.

    பரிசு பொருட்கள் வாங்கி வந்தவர்கள், நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றனர். சிரித்தபடியே வாழ்த்துகளை பெற்றுக்கொண்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
    Next Story
    ×