search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    வரலாறு காணாத உச்சம்- தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,100 ஆக உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.4,100 ஆகவும் சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.32,800-ஆகவும் விற்பனையாகிறது.
    சென்னை:

    புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சென்னையில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனவரி 8-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.

    போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலை இல்லாமல் காணப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் பரவிய கொரோனா வைரசால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

    சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை பல நாடுகள் நிறுத்தின. சீனாவுக்கு ஏற்றுமதியும் தடைபட்டது. இதனால் சர்வதேச சந்தையில் பொருளாதார தேக்க நிலை உருவானது. எனவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ததால் தங்கம் விலை மீண்டும் ‘கிடுகிடு’வென உயர்ந்தது.

    சென்னையில் கடந்த 20-ந்தேதி ஒரு கிராம் ரூ.3,978-க்கும், ஒரு பவுன் ரூ.31,824-க்கும் விற்பனையானது. மறுநாள் (21-ந்தேதி) தங்கம் விலை வரலாறு காணாத வகையில் பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.4,051-க்கும், ஒரு பவுன் ரூ.32,408-க்கும் விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து 22-ந்தேதியும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.4,072 ஆகவும், ஒரு பவுன் ரூ.32,576 ஆகவும் உயர்ந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.4,100ஆக உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.32,800 ஆனது.

    வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ள தங்கம் விலை பவுன் ரூ.33 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் விலை மேலும் அதிகரிக்க கூடும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.52,900 ஆனது. கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.52.90-க்கு விற்பனையாகிறது.
    Next Story
    ×