
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடம் காட்டுப்பகுதி அல்ல. கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. செக்போஸ்டில் பணியில் இருந்த அதிகாரியை சர்வ சாதாரணமாக கத்தியால் குத்தியும், சுட்டும் கொன்று விட்டு செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்.
அவர்கள் கொன்றது ஒரு வில்சனை அல்ல. ஒட்டுமொத்த காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வளவு நிதானமாக செயல்பட முடியும்.
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது. பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக தமிழகம் மாறி கொண்டிருக்கிறது என்பதை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.
தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட ஒரு கட்சி கூட இந்த சம்பவத்தை கண்டிக்காதது கண்டனத்துக்குரியது.

கல்லூரி மாணவர்களுக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர்களை தூண்டிவிட்டு போராட வைக்கிறார்கள். இந்த கட்சிகளின் முகமூடி விரைவில் கிழியும்.
டெல்லியில் 3 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளார்கள். குஜராத்தில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கு இதைவிட சாட்சி தேவையில்லை.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்துதமிழகத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதா கிருஷ்ணன் கூறினார்.