search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    நகராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஊராட்சிப் பகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தின் நகராட்சிப் பகுதிகளிலும் தேர்தல்களை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மொத்தமுள்ள 121 நகராட்சிகளில், நகராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நகராட்சி தலைவர் பதவியில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி தலைவர் பதவி, பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை, நாகை மாவட்டம் சீர்காழி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், குன்னூர், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, பெரம்பலூர் ஆகிய 9 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நீலகிரி மாவட்டம் நெல்லியாலம், சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆகிய 8 நகராட்சி தலைவர் பதவிகள், தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம், வந்தவாசி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலைப்பேட்டை, தென்காசி மாவட்டம் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காயல்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை, பத்மநாபபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்,

    திருவாரூர், திருச்சி மாவட்டம் துறையூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, கடலூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செங்கல்பட்டு, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் கரூர் மாவட்டம் குளித்தலை, சேலம் மாவட்டம் மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய 51 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் பெண்களுக்கு (பொதுப்பிரிவு) ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மொத்தமுள்ள 121 நகராட்சிகளில் 61 நகராட்சி தலைவர் பதவி இடங்கள், அதாவது 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×