search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம் வரைபடம்
    X
    வானிலை ஆய்வு மையம் வரைபடம்

    சென்னையில் இடியுடன் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு

    வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் இடியுடன் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

    கனமழையை பொறுத்த வரையில், வட தமிழகம் பகுதிகளில் திருவள்ளூரில் 22 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. பூண்டி-21 செ.மீ., அரக்கோணம்-17 செ.மீ., தாமரைப்பாக்கம்- 15 செ.மீ. நுங்கம்பாக்கம்- 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி.


    கனமழையை பொறுத்தவரை திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

    சென்னையை பொறுத்தவரை சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்து வரும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த மழை அடுத்து வரும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிழக்கு திசை, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×