search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் இன்று நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி.
    X
    திருவண்ணாமலையில் இன்று நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி.

    கேள்வி கேட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு

    எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்டால் கோபம் வருகிறது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இன்று காலை நடந்த திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 1967ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அண்ணா முதல்- அமைச்சரான பிறகு சட்டமன்றத்தில் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

    இதற்கு பிறகு சீர்திருத்த திருமணங்கள் அதிகமாக நடக்கிறது.

    இதனால் திருமணம் நடத்தி வைக்க அய்யர்களை விட எங்களை போன்றவர்களுக்கு தான் அதிக கிராக்கி உள்ளது. எங்களைப் போன்றவர்களை தான் திருமண விழாவில் எதிர்பார்க்கின்றனர்.

    திருமண விழாவில் அரசியல் பேசினால் தவறாக நினைப்பார்கள். ஆனால் நான் அரசியல் பேசாமல் சென்றால் மக்கள் கோபம் அடைவார்கள்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 10, 15 அமைச்சர்கள் வெளிநாட்டுக்குச் சென்று பல்வேறு தொழில் முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக வெளிநாட்டுக்கு செல்ல தயாராக உள்ளனர்.

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.2.4 லட்சம் கோடி முதலீடு பெற்றதாக தெரிவித்தார். இது பற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். ஆனால் உரிய பதில் அளிக்கவில்லை.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். இதுபற்றி கேள்வி கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதுவரை 5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது எந்த நிறுவனங்களுடன்ஒப்பந்தம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்.

    இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால் அவருக்கு ஆத்திரம் வருகிறது. கோபம் வருகிறது. கேள்வி கேட்க நீங்கள் யார் என எங்களை பார்த்து கேட்கிறார்.

    உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள்.

    கேள்வி கேட்பது எங்கள் உரிமை. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எதுவும் செய்யவில்லை அதனால் உங்களால் பதில் கூற முடியவில்லை.

    இந்த ஆட்சியில் கலெக்சன் கரப்‌ஷன் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் 1½ ஆண்டுகள் தான் ஆட்சி இருக்கும் வரை சுருட்டிக்கொண்டு செல்வோம் என செயல்படுகிறார்கள்.

    தமிழகத்தில் காமராஜர் பக்தவத்சலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் ஆட்சி செய்தனர். எந்த ஆட்சியிலும் இல்லாத கொடுமை தற்போது நடந்து வருகிறது.

    முதலமைச்சர் அமைச்சர்கள் அலுவலகம் செயல்படும் சென்னை கோட்டையில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற கொடுமை நடந்தது உண்டா?

    குட்கா புகையிலை போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் பேராபத்தாக உள்ளது. இதனை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தமிழகத்தில் பல கடைகளில் குட்கா புகையிலை போன்றவை வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதுணையாக இருக்கிறார்

    இது பற்றி சட்டமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக கூறினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அமைச்சருக்கு துணையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ் டி.ஜி.பி. துணை நிற்கிறார். அவருக்கும், அமைச்சருக்கும் மாமூல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடமுள்ள நெடுஞ்சாலைத்துறையை பயன்படுத்தி அவருடைய உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கி முறையீடு செய்து கோடி கோடியாக கமி‌ஷன் பெறப்பட்டுள்ளது.

    இதுபற்றி தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கை எதிர்த்து போராடி அல்லது சி.பி.ஐ.யிடம் எடுத்துக்கூறி தன் மீது தவறு இல்லை என எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருந்தால் அதனை வரவேற்று இருப்போம். ஆனால் இந்த வழக்கை சி.பிஐ. விசாரிக்க தடை ஆணை பெற்றுள்ளார். ஊழல், லஞ்சம், கமி‌ஷன், கரப்‌ஷன் தொடர்ந்து நடந்து வருகிறது.

    மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நல்லாட்சி உருவாகும் வாய்ப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வருகின்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலாகவோ அல்லது உள்ளாட்சி தேர்தலாகவோ இருந்தாலும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலை போல் தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தர உறுதி ஏற்க வேண்டும்.

    இதனை மகிழ்ச்சியுடனும் உரிமையுடனும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வருங்காலத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று வாழ்த்துங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×