search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஜெயராம்
    X
    கைதான ஜெயராம்

    பேஸ்புக் காதல் - பள்ளிக்குள் புகுந்து கத்தியை வைத்து மிரட்டி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது

    இரணியல் அருகே பள்ளிக்குள் புகுந்து ஊழியர் கழுத்தில் கத்தியை வைத்து மாணவியை கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரணியல்:

    குமரி மேற்கு மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 6-ந்தேதி மாணவி வழக்கம் போல பள்ளிக்கு வந்தார். வகுப்பு தொடங்கிய சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் முதியவருடன் பள்ளிக்கு சென்றார்.

    அங்கு தலைமை ஆசிரியரை சந்தித்து, மாணவியின் பெயரை கூறி அவரது உறவினர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் மாணவியின் தந்தை திடீரென இறந்து விட்டதாகவும், மாணவியை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் கூறினார்.

    வாலிபர் கூறியதை கேட்டதும், தலைமை ஆசிரியர், மாணவியை அழைத்து வாலிபரையும், அவருடன் வந்த முதியவரும் மாணவியின் உறவினர்கள் தானா? என்று கேட்டார். உறவுமுறை பற்றி மாணவி கூறியதும், வாலிபர் தெரிவித்ததும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

    இதனால் வாலிபர் மீது தலைமை ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் உடனே வாலிபரிடம், நீங்கள் செல்லுங்கள். நாங்கள் மாணவியை ஆசிரியை துணையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம், என்றார்.

    தலைமை ஆசிரியரின் பதிலை கேட்டதும் வாலிபர் ஆத்திரம் அடைந்தார். மாணவியை தன்னுடன் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று கத்தினார். தலைமை ஆசிரியர் மீண்டும் மறுக்கவே, அவரது அறையில் இருந்த பள்ளி பெண் ஊழியரை பாய்ந்து பிடித்தார். அவரது கழுத்தில் கத்தியை வைத்தப்படி, மாணவியை தன்னுடன் அனுப்பாவிட்டால் ஊழியரின் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டினார். இதை கண்டு மற்ற ஊழியர்கள் அலறினர்.

    சத்தம் கேட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இது பற்றி இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இரணியல் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். ஆசிரியர்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் ஜெயராம்(வயது29). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், இந்திரா காலனியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. ஜெயராம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும், மாணவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    மாணவி அடிக்கடி செல்போனில் மூழ்குவதை அறிந்த பெற்றோர், அவரது தொடர்புகளை கண் காணித்தனர். இதில் மாணவிக்கும், ஜெயராமுக்கும் பழக்கம் இருப்பதை அறிந்தனர். அதனை அவர்கள் கண்டித்தனர்.

    இது பற்றி மாணவி, ஜெயராமுக்கு தெரிவித்தார். அவர் கருங்கல் வந்து மாணவியை தன்னுடன் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார்.

    மாணவியை ஜெயராம் கடத்திச் சென்றது பற்றி பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெங்களூரு சென்று மாணவியையும், ஜெயராமையும் பிடித்து வந்தனர்.

    பின்னர் ஜெயராம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட ஜெயராம் சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

    வெளியே வந்த பின்பு தான் மீண்டும் மாணவியை சந்திக்க முயன்றார். பெற்றோர் அவரை திங்கள் நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாற்றி இருப்பதை அறிந்து கொண்டார். அங்குச் சென்று மாணவியை மீண்டும் கடத்த முயன்ற போது தான் சிக்கிக் கொண்டார்.

    இதையடுத்து இரணியல் போலீசார் ஜெயராமை மீண்டும் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 448, 353, 294பி, 506(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
    Next Story
    ×