search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

    மத்திய அரசின் நிதியில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தில் தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள் வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் மத்திய அரசு நிதியில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 82 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், மத்திய அரசின் இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு என்ன பயன்? என்ற வினாவுக்கு தான் மகிழ்ச்சியான விடை கிடைக்கவில்லை.

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளில் 39 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்து விட்டன. இவற்றில் ஒரு கல்லூரி கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

    திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதால், இந்த மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இதை தமிழக அரசால் மட்டும் செய்ய முடியாது என்பதால், மத்திய அரசும் அதன் பங்குக்கு உதவிகளை செய்திருக்க வேண்டும்.

    மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து தகுதிகளும் தமிழக மாவட்டங்களுக்கு உண்டு. மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 101 முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் கூட மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு முன்வராததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    எனவே, 75 புதிய மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகளைத் தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×