search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    மத்திய அரசு உதவியுடன் பாலாற்றில் தண்ணீர்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

    மத்திய அரசின் உதவியோடு பாலாற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சட்டவிரோதமாக தடுப்பணைகளைக் கட்டியதால் கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் கனமழை பெய்த நிலையிலும் தமிழகத்திற்குத் தண்ணீரே வரவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திராவில் 36 கி.மீ மட்டுமே பயணித்து, தமிழகத்தில் 222 கி.மீ. தூரம் ஓடும் நம்முடைய முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாக பாலாறு திகழ்கிறது.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 4.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாலாற்றுத் தண்ணீரை தான் நம்பி இருக்கிறார்கள்.

    பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுப்பதற்காக புதிய தடுப்பணைகளைக் கட்டுவதற்கு ஆந்திர அரசு முயற்சித்த போது ஜெயலலிதா அதனை கடுமையாக எதிர்த்தார். தடுப்பணை பணிகளை நிறுத்தவிடுத்த கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாததால் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்படியான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளும் அம்மா முதலமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் அம்மாவின் மறைவுக்குப்பிறகு ஏற்கனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்துவது, புதிய தடுப்பணைகளைக் கட்டுவது என ஆந்திர அரசு முழுவீச்சில் செயல்பட்டது.

    பாலாறு


    எனினும் பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்திவரும் முதலமைச்சர் பழனிசாமி, போதிய அக்கறைக்காட்டாததன் விளைவே தற்போது அங்கே கனமழை பெய்தும் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் வந்து சேராத நிலை உருவாகி உள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கிற, ஏற்படபோகிற எதிர்கால பாதிப்புகளையும் முழு புள்ளி விவரங்களுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் முன் வைத்து, பாலாற்றில் நடைபெறும் தடுப்பணை சார்ந்த அனைத்து பணிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேலும் பாலாற்று நீர்ப்பகிர்வு குறித்து 1892-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், தடுப்பணை பணிகளைத் தமிழகத்தின் அனுமதி இன்றி மேற்கொள்ள கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காத ஆந்திர அரசிடம் இழப்பீடு கேட்டு தனி வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் தொடர வேண்டும்.

    36 கி.மீ. தூரத்தில் 29 தடுப்பணைகளை ஆந்திரா கட்டி விட்டதால், பாலாற்றில் இனி சுத்தமாக தண்ணீர் வராத நிலை உருவாகி இருக்கிறது. எனவே மத்திய அரசின் உதவியோடு பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்து தமிழகத்திற்கு பருவம் தோறும் பாலாற்றில் விட வேண்டிய தண்ணீரின் அளவை நிர்ணயித்து புது ஒப்பந்தம் போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×