search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    நத்தம் அருகே பகுதி நேர ரே‌ஷன் கடை கேட்டு 2 கிராம மக்கள் சாலை மறியல்

    நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த குட்டூர் மற்றும் காட்டுவேலம்பட்டி கிராம மக்கள் தங்கள் ஊருக்கு பகுதி நேர தனிரே‌ஷன் கடை வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நத்தம்:

    புன்னப்பட்டி ஊராட்சியில் உலுப்பகுடி, வீரப்பநாயக்கன்பட்டி, வேலாயுதம்பட்டி, புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இதில் புன்னப்பட்டி, வேலாயுதம்பட்டியில் ஏற்கனவே ரே‌ஷன் கடைகள் செயல்பாட்டில் உள்ளது. உலுப்பகுடியில் உள்ள கடையில் வீரப்பநாயக்கன்பட்டி, காட்டுவேலம்பட்டி, குட்டூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்கி வந்தனர்.

    இந்நிலையில் குட்டூர் மற்றும் காட்டுவேலம்பட்டி கிராம மக்கள் தனித்தனியே மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் ஊரிலிருந்து உலுப்பகுடி கூட்டுறவு வங்கி தலைமை ரே‌ஷன் கடைக்கு சுமார் 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். எனவே பகுதி நேர ரே‌ஷன் கடையை எங்கள் ஊரில் தனித்தனியே அமைத்து குடிமை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம்.

    இந்நிலையில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று காலை சுமார் 10 மணிக்கு குட்டூரை சேர்ந்த பொதுமக்கள் அவ்வூர் விலக்கிலும், காட்டுவேலம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது ஊரின் அருகிலும் உள்ள நத்தம்-திண்டுக்கல் சாலையில் 2 இடங்களில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் வட்ட வழங்கல் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, கிராம நிர்வாக அலுவலர் கொண்டல் ராஜ், உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.

    அப்போது முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அந்தந்த ஊர்களில் பகுதி நேர கடை ஏற்படுத்த உத்தரவு பெறப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, அறந் தாங்கி செல்லும் பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து தடைபட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×