search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    X

    பொங்கல் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய பொங்கல் பரிசு திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏழைகள் இதனால் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    ஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.


    முழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.

    இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று நீதிமன்றத்தில் இந்த அரசு காட்டிய ஆர்வத்தில் நேர்மையும், நல்ல நோக்கமும் இருந்தது என்பது உண்மையானால், உடனடியாக இந்த விவகாரத்தில் என்ன நடந்து என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைக்கோல் தொட்டி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் ஆளும் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர் புகுந்து இலவசமாக வழங்கப்பட்ட 1,000 ரூபாயில் 100 ரூபாயை பயனாளிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு போனதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

    இப்படி நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடந்த தவறுகளைத் திருத்தி, மீதமுள்ளவர்களுக்காவது நியாயமான முறையில் இலவசப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran
    Next Story
    ×