search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடைகளில் 7-ந்தேதி முதல் பொங்கல் பொருளுடன் ரூ.1000 வழங்குவது எப்படி?:  கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
    X

    ரேசன் கடைகளில் 7-ந்தேதி முதல் பொங்கல் பொருளுடன் ரூ.1000 வழங்குவது எப்படி?: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

    ரேசன் கடைகளில் வரும் 7-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. #PongalGift #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு 1.98 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை பொது மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது பற்றி உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் சோ.மதுமதி மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இருப்பதால் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

    இப்பணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி பொங்கலுக்கு முன்னர் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். ரே‌சன் கடைகளில் 31.12.2018 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைத்தாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரே‌சன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    1000 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக குறிப்பிட்டு குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பிரித்து வழங்க வேண்டும்.

    பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வங்கி வழியாக செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினமும் ரொக்கமாக பெற்று ரே‌சன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.

    சென்னை உள்பட 10 மாநகராட்சிகளில் பொங்கல் பரிசை விரைவாக வழங்கிட கூடுதல் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரே இடத்தில் பல ரே‌சன் கடைகள் இருந்தால் கூடுதல் மேஜை நாற்காலிகளை அமைத்து கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.

    கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அந்தந்த பகுதி காவல் துறை ஒத்துழைப்பையும் பெற வேண்டும்.

    பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை எந்த தேதியில் ரே‌சன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரு வாரியாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கான தகவல்கள் தெளிவாக ரேசன் கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

    இறுதியான ஓரிரு நாட்களில் விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்க தொகையான 1000 ரூபாயும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை முடிந்தவரை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் 1000 ரூபாய் ரொக்கப்பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) பதிவு செய்த பின்புதான் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அவர்களது குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம்.

    அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவு சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவு தாளில் குறிப்பிட வேண்டும்.

    குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்புதல் பெற வேண்டும்.

    குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தவறாமல் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப்பணம் அனைவருக்கும் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் ரே‌சன் கடைகளில் நெரிசல் ஏற்படும் வகையில் கூட வேண்டாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும். 5.30 மணி அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.

    அந்த டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வரிசையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 5.30 மணி அளவில் வரிசையில் வந்து நின்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வருகின்ற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.

    பரிசுத் தொகுப்பு வாங்க வரும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பெற்று செல்ல வேண்டும். தேவையில்லாமல் வரிசையை விட்டு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் காவல் துறை பாது காப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 1000 ரூபாய் ரொக்க விநியோகம் குறித்தும் புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். ஏதாவது புகார்கள் வந்தால் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த அலுவலரிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களது தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட வேண்டும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

    அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக சென்று அடைவதை உறுதி செய்ய வட்ட அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு தகவலை 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை நடமாடும் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 1000 ஆகியவை சரியானபடி வழங்கப்பட்டுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட வேண்டும். தவறுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 விநியோகிக்கப்பட்ட நபர்களிடம் பரவலாக ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செய்யப்படும் அன்றாட பணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு ஆணையாளர் மதுமதி அந்த சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.  #PongalGift
    Next Story
    ×