search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது பிரச்சனை- முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிகள் ஆலோசனை
    X

    மேகதாது பிரச்சனை- முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிகள் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான தி.மு.க. அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்தை அறிய முடிவு செய்தது. இதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது.

    கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவருடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., திராவிடர் கழகம் சார்பில் கலிபூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் பேசினார்கள்.

    கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் தே.மு. தி.க., பா.ம.க., த.மா.கா., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. #MekedatuDam #DMK #MKStalin
    Next Story
    ×