search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகை மீது காழ்ப்புணர்ச்சி கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு
    X

    தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகை மீது காழ்ப்புணர்ச்சி கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு

    பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #Jayalalithaa
    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் கடந்த 2012-ம் ஆண்டு நீக்கப்பட்டார். இதுகுறித்து இந்தியா டுடே பத்திரிகை 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி செய்தி வெளியிட்டது.

    அதில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் செங்கோட்டையனை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி சமுதாயத்தில் உள்ள தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி அந்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தொடர்ந்தார்.


    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரிகை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பத்திரிகையில் வெளியான செய்தியினால் தன்னுடைய நற்பெயருக்கு எந்த வகையில் களங்கம் ஏற்பட்டது என்பது தெளிவாக இல்லை. எனவே, பத்திரிகை மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன்.

    இந்திய ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான பத்திரிகையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். பத்திரிகையின் குரல் நெறிக்கப்பட்டால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆகியோரது உழைப்பு வீணாகிவிடும்.

    சில நேரங்களில் பத்திரிகைகளில் தவறுகள் நேரலாம். அதேநேரம் ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கை மறுக்க முடியாது.

    ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டும்போது அதன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது. இதுபோன்ற விசயங்களுக்காக அவதூறு வழக்குகள் தொடரப்படுவதை தடுக்காவிட்டால், இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாகிவிடும்.

    பத்திரிகைகளுக்கு சமூகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், பொதுமக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமைகள் உள்ளது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார். #MadrasHC #Jayalalithaa 
    Next Story
    ×