search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் தற்கொலை: உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும்- அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
    X

    மாணவன் தற்கொலை: உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும்- அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

    தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.#TasmacProtest #AlcoholicFather #StudentSuicide
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    மதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்து கொள்ள முடியாமல், தினேஷ் என்ற மாணவர் நெல்லை வண்ணாரப்பேட்டை தொடர்வண்டிப் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஒரு உயிர் மதுவின் தீமையால் பறிபோயிருக்கிறது. மாணவன் தினேஷின் தற்கொலைக்கு அவரது தந்தை மாடசாமி மட்டும் காரணமல்ல; தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்து வரும் எடப்பாடி பழனிசாமியும் தான் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் முடிவுக்காக காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக்கொண்டிருக்காமல் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    உயிரை மாய்த்துக்கொண்ட மாணவனின் தந்தை உடனடியாக குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும். இது தமிழக அரசுக்கு பாடமாக அமையும் என்று நம்புகிறேன். மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். மாணவனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    மக்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டிய தமிழக அரசு, வருவாயை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மாணவனின் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மது ஒழிப்பிற்காக மாணவனின் இத்தகைய கவன ஈர்ப்பு தற்கொலை எந்த வகையிலும் பிரச்சினைக்கு தீர்வாகாது. மாணவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை களத்தில் நின்று போராட வேண்டும். அப்போது தான் நிரந்தர தீர்வை பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    மாணவன் தினேஷ் நல்ல சிவன்தனது தந்தை குடிப் பழக்கத்திற்கு அடிமையானதால் வேதனைக்குள்ளாகி தூக்குப்போட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த மரணம் ஒரு வகையிலான அரசு வன்கொடுமையே என்பதை உணர்த்துகிறது. மதுவை ஒழிப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தினேஷ் நல்லசிவனின் சாவுக்கு பின்னராவது மனம் இளகி மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு விரைந்து மதுக்கடைகளை மூட முன்வரவேண்டும்.

    குடிப்பழக்கத்தால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாழாகி வருவதை தமிழக அரசு உணரவேண்டும். குடிப்பழக்கம் தனிநபர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொடூரமான குற்றங்களும் பெருகுகின்றன. சாதி, மத வன்முறை வெறியாட்டங்களுக்கு இடம் அளிக்கின்றன.

    எனவே மாணவன் தினேஷ் நல்லசிவனின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதற்கு அரசு முன்வரவேண்டும். தினேஷ் நல்ல சிவனுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவனை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தந்தை மது அருந்தியதால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடைகளை படிப்படியாக ஒழிப்போம், மூடுவோம் என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை செய்யாததால் தான் இங்கே தொடர் மரணங்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் தெகலான்பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுக்கடைகளால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பெரும் சீரழிவை சந்தித்து வருகின்றன. மாணவனின் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு பிறகாவது தமிழக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்’ என்று கூறியுள்ளார். #TasmacProtest #AlcoholicFather #StudentSuicide
    Next Story
    ×