search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சி தலைவர்கள்"

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மாபெரும் வெற்றியை தன் வசப்படுத்திய பா.ஜ.க.வுக்கும், நரேந்திரமோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

    வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். நரேந்திர மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்திய உருவெடுக்கும் என்று நம்புகிறேன்.

    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்):-

    பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு 2-ம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

    பா.ஜ.க. அரசில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமரப்போவது, ஒட்டுமொத்த இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதி ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியும், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):-

    நரேந்திரமோடியின் உழைப்புக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். 5 ஆண்டு கால சாதனைகள் மூலம் மக்களின் இதயங்களை வென்று, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):-

    பா.ஜ.க.வின் அமோக வெற்றி இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கும் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வல்லரசாக மாறி சாதனை படைக்க வேண்டும்.

    அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #ParliamentaryElection
    ஊத்துக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை முறைகளை பற்றி விவரிக்கும் சிறப்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

    தாசில்தார் வில்சன் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர் பார்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தேர்தல் பிரச்சாரத்தில் பிற கட்சிகள் மீது விமர்சனம் செய்யும் போது அக்கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனங்கள் மட்டும் இருக்க வேண்டும்.

    ஆனால் பிறகட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சொந்த வாழ்கை பற்றிய விமர்சனங்கள், நிரூபிக்கப்படாத குற்றசாட்டுகள், மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனம் கண்டிப்பாக செய்யக்கூடாது.

    மேலும் அரசியல் கட்சி தலைவர்களை இழிவுப்படுத்தும் படங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். வாக்குகளை பெறுவதற்காக இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக்கூடாது.

    தேர்தல் பிரச்சார களமாக மசூதி, சர்ச் மற்றும் கோவில் போன்ற வழிபாடு தலங்கள் பயன்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாற்றம் செய்தல் போன்ற குற்றசெயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு உதவி தேர்தல் அலுவலர் பார்வதி தெரிவித்தார்.

    இதில் துணை வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் ரவி, இன்ஸ்பெக்டர்கள் அனுமந்த், மதியரசன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். #ParliamentaryElection
    சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #Adithanar
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இதழியல் துறையின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக்கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசியல், இதழியல் மற்றும் தமிழர் நலனுக்கு ஆதித்தனார் ஆற்றிய பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக இந்த அறிவிப்பு அமையும்.

    பென்னிகுயிக், காலிங்கராயர், ம.பொ.சிவஞானம் ஆகியோரின் பிறந்தநாட்கள் அரசு விழாக்களாகக்கொண்டாடப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

    பெரும்பிடுகு முத்தரையருக்கு மணி மண்டபம் வரவேற்கத்தக்கது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு அவர் பெயரைச்சூட்ட வேண்டும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஏ.டி.பன்னீர்செல்வம், ஆழியாறு அணைத் திட்டத்தின் மூலவர் பழனிசாமி கவுண்டர் ஆகியோருக்கு மணிமண்டபம், அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் அரசு விழாவாக நடத்தப்படும், கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு நூலகமும் அமைக்கப்படும் போன்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    இரட்டைமலை சீனிவாசனாருக்கு மணிமண்டபம், அல்லாள இளையநாயகருக்கு குவிமாடத்துடன் திருவுருவச்சிலை, ஒண்டிவீரனின் மணிமண்டபம் புதுப்பிக்கப்படும் ஆகிய அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்மொழி மற்றும் தமிழ் இனம் மீது தீவிர பற்றுக்கொண்ட சி.பா.ஆதித்தனார், பொது வாழ்விலும் தனது முத்திரையை பதித்தவர். மிகச்சிறந்த கல்வியாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், பண்பாளர் என பன்முகம் கொண்டவர். காலம் தாழ்ந்து தமிழக அரசால் எடுக்கப்பட்ட முடிவாயினும் பாராட்டுக்குரியது, போற்றி வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாருக்கு, தமிழக அரசு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்ப்பதோடு அவர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் ம.பொ.சி.க்கு அரசு விழா எடுக்க முனைந்திருப்பது அதீத மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

    சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இட்லி இனியவன், மக்கள் உரிமை கழக முதன்மை செயலாளர் இனியன் ஜான் ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியும் வரவேற்று உள்ளது. #Adithanar
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பது தான் கருணாநிதி ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த தி.மு.க.வின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக்கூட்டத்தைக் கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும், 27 வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தலைவணங்கி, வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன். ஏனெனில் இதுமாதிரியான வழக்குகளில், இந்திய அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேல் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்சினைகளில் குறுக்கிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னருக்கு முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு விரைந்து பரிந்துரை செய்து, குற்றவாளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவிப்பவர்களை விடுவிக்கும் சூழல் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு தலையிடாமல் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்கள் உள்ளத்தில் ஒரு ஆறுதலை ஏற்படுத்தி, பால்வார்த்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி, அதில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை வழங்க வேண்டுமெனவும், இப்பரிந்துரையினை ஏற்று தமிழக கவர்னர் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    7 தமிழர்களும் எதிர்கொண்டு வரும் இருள் நிறைந்த பாதை முடிவடைந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் நோக்கத்துடன் சீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு போன்றவற்றை மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இப்பொழுது தமிழ்நாடு அரசுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது; இதனைப் பயன்படுத்தி, காலதாமதம் செய்யாமல் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாடே எதிர்ப்பார்த்திருக்கும் நல்லதோர் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளை உளமார பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. இதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி, 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். #RajivCaseConvicts
    கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


    தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆளுநர் ஆட்சி உண்மையிலேயே நடைபெற்ற கால கட்டங்களில் கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை.

    இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

    மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    ‘‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?’’ என்று கேட்டவர் அறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு.

    வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல்-அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா?

    1993 ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதன்பிறகு 1995-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னா ரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

    மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

    அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்தார்.

    ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார்-செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்:-


    அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மாநிலங்களின் உரிமைகளிலும், மக்களின் உரிமைகளிலும் தலையிடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, என் வீட்டிற்குள் நுழைந்து நான் என்ன சமைக்கிறேன்? என் குழந்தைக்கு என்ன சட்டை வாங்கி கொடுக்கிறேன்? என்ன மொழியில் பாடம் கற்பிக்கிறேன்? என்பதையெல்லாம், எனக்கு உரிமை இருக்கிறது நான் கட்டாயம் கேட்பேன் என்று ஆளுநர் வருவாரேயானால், என் வீட்டு வாசலில் அவரை நிறுத்துவதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது.

    இதை ஆளுநரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியும் புரிந்துக் கொள்ள வேண்டும். காவல்துறையின் தலைமை அதிகாரியும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ அதுபோல, குடிமக்களுக்கும் தங்களை தனி உரிமையில் பாதுகாத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அது அதிகாரத்தை விட அதிக பலம் பெற்றது.

    1947-ம் ஆண்டு முதல் ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதும் இல்லாத அளவிற்கு இவர் சுற்றிச் சுற்றி சடுகுடு ஆடுவது போல வலம் வருகிறார், ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு காரணம், எங்களை அத்தனை பேருமே திருடர்கள் என்றும், நீங்கள்தான் காவலாளர் என்றும் வருகிறீர்களா? தமிழகம் ஒன்றும் டெல்லிக்கு அடிமைப்பட்டு இல்லை. நீங்கள் நுழைவதும் இந்த கேள்விகளை கேட்பதற்கே அதிகாரம் இருக்கிறது என்று வருவதால், உங்களால் தமிழகம் தன்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமை இழந்திருக்கிறது. இதனால் டெல்லிக்கு தமிகம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதாகத் தான் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது.

    எங்களை பொறுத்த வரையில் ஆளுநர் என்ற ஒரு பதவி அவசியம் தானா என்று நாங்கள் நெடுநாட்களுக்கு முன்பே எழுப்பிய கேள்வி. இதனை மத்திய அரசு இந்திய அரசியலமைப்பில் வைத்திருக்கிறது. அது மாநிலத்தின் உரிமையை பாதுகாப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் இருக்க வேண்டுமே அன்றி, அதனை அசிங்கப்படுவதற்காக பயன்படுத்தப்படுமே ஆனால், டெல்லி அதிகாரத்தால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரியை கட்டாயம் நாங்கள் எதிர்க்கத்தான் செய்வோம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-


    மக்களால் தேர்ந்தெடுப்பட்ட அரசு இருக்கும்போது, இரட்டை ஆட்சி நடப்பதை போன்று ஆளுநர் செயல்படுவது கண்டனத்திற்குரியது. ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் ஆளுநராக தொடர்வதற்கே தார்மீக உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

    எந்த வகையிலும் சட்ட வரம்பிற்குள் உட்படாத ஒருவர் ஆளுநராக நீடிப்பது நியாயமா? என்ற ஒரு கேள்வி தமிழகத்தில் நீடிக்கும்போது, அவர் நான் சட்டப்படி மாவட்டங்களுக்குப் போய் ஆய்வு செய்கிறேன் என்கிற போது, மாநில அரசாங்கம் எதற்கு இருக்கிறது.

    ஒரு ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். அதுதான் ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரம்.

    மாநில அமைச்சர்-அதிகாரிகளின் செயல்பாட்டில் இவர் சென்று ஆய்வு செய்தால், தமிழகத்தில் ஒரு இரட்டை அரசாங்கம் செயல்படுகிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-


    தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு தொடரும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளாவிட்டால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீவிரமாக போராடுவோம். ‘‘ஆளுநர் சட்டப்படிதான் நடந்து கொள்கிறார். எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றன’’ என்கிற முறையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

    ஆளுநர் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை எதிர்த்து தீவிரமாக போராடுவோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:-

    தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக அறப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா தற்கொலை கொண்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.#NEET2018 #Pratheeba TNStudentSuicide
    சென்னை:

    ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அநீதிகளை ஏற்படுத்தி வருகின்றன. அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராட்டங்களுக்கான வியூகங்களை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை கேட்டுக்கொள்கிறேன்.

    ‘நீட்’ தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது நெஞ்சத்தை பிழிகிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் கதிதான் என்ன? ‘நீட்’ தேர்வால் தமிழ்நாட்டுக்கு 1,450 இடங்கள் பறிபோய்விட்டது. இதனை பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை. இதற்கொரு முடிவு கண்டாக வேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து மாாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘நீட்’ தேர்வு ஏழைகளின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிப்பதற்கான கருவியாக மாறியுள்ளது.

    ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் பிரதீபா இன்னுயிரை மாய்த்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கல்வியை தரமானதாக மேலும் முன்னேற்றி ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் அளவுக்கு மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சியளிக்கவேண்டும். மாணவர்களும் கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாக எதிர்காலத்தை எதிர்கொள்ளவேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கனவு ஈடேறாத துக்கத்தில் மாணவி பிரதீபா தற்கொலை செய்துள்ளார். ‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் அனிதாவின் உயிர் காவுக்கொள்ளப்பட்டது. இப்போது பிரதீபாவை அது பலி வாங்கியிருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சுருக்கிவிட்ட ‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் ஒழிக்கப்படவேண்டும்.

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் சந்தித்த தோல்வி காரணமாக தற்கொலை செய்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாநில வளர்ச்சி, தமிழக மாணவர்களின் எதிர்காலம், தமிழக இளைஞர்களின் கனவு போன்றவற்றை சிதைக்கும் ஒரு தேசிய கொள்கை தமிழகத்துக்கு தேவை இல்லை. இந்த கருத்தை அனைத்து தமிழக தலைவர்களும் ஒருமித்த குரலுடன் உரைத்தால் தான் ‘நீட்’ தேர்வுக்காக தற்கொலை செய்யும் மாணவர்களின் துயர நிலை மாறும்.

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதீபாவின் உயிரிழப்புக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசும், விலக்கு பெற்றுத்தர முடியாத தமிழக அரசும் தான் காரணம். பிரதீபா குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பெரவளூர் கிராமத்துக்கு சென்று மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சென்ற ஆண்டு அனிதா என்கிற மாணவி இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 9 தலைவர்கள் கலந்து கொண்டனர்.#CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆகிய 9 கட்சித் தலைவர்களும் தி.மு.க. சேர்ந்த துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், வி.பி. துரைசாமி, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தவிட்டது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை பெறுவதற்கு அரசு தேவையான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.#CauveryIssue #MKStalin
    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    மாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது ஜெயலலிதாவின் அமுத மொழியாகும்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.

    இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்தவித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-



    பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

    அரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு கல்வி கற்று முன்னேற வேண்டும். தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவ, மாணவிகள் மனம் தளராமல் வர இருக்கின்ற தேர்வில் நன்கு தேர்வு எழுத இப்போதே கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள யோசனை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான் தங்களின் தீர்ப்பை செயல்படுத்த முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக மேற்பார்வை வாரியம் அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டம் தமிழக நலன்களுக்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணையின் போது தமிழகம் கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். காவிரி மேற்பார்வை வாரியம் தான் இறுதியான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டால், அதைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் எதிர்க்கிறது என்பதை காரணமாக காட்டி, அரசியல் சட்ட அதிகாரம் இல்லாத ஒரு வெற்று மேற்பார்வை குழுவை அமைக்க செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மன்னிக்கவே முடியாத அநீதி.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நிகரான நடுவர் மன்ற தீர்ப்பை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்திடும் வகையில் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி, தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை தட்டிப்பறிக்க நினைப்பதை தமிழக மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித்தீர்ப்பு வெளியாகும், அது நிரந்த தீர்வுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்த தமிழக விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் வருகிற 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக, அது நிரந்த தீர்வாக அமைந்து தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அந்த இறுதி அறிவிப்புக்கு பிறகு உடனே மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட இருக்கும் அமைப்புக்கோ அல்லது குழுவுக்கோ அல்லது ஆணையத்துக்கோ எதுவாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் செயல்திட்டம் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த காவிரி அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் நதிநீர் பங்கீடு எந்த அளவுக்கு உண்மைத்தன்மையுடன் பகிர்ந்தளிக்கப்படும் என்ற சந்தேகம் எழுகிறது. நதிநீர் பங்கீட்டில் நடுநிலையாக செயல்பட்டு முழு அதிகாரம் செலுத்தும் ஆளுமை காவிரி அமைப்புக்கு இல்லாதபட்சத்தில் இந்த செயல்திட்ட வரைவினை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணும் வரை உரிமையை மீட்க போராடும் தமிழர்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் உறுதுணையாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் துரோகம். அந்த வரைவு திட்டத்தின் நகல் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள விவரங்களை விவாதித்து தமிழக அரசின் சார்பில் 16-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. காவிரி பிரச்சினை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து நிலையான கருத்தை இறுதி செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:-

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை முற்றிலும் தமிழக நலனுக்கு எதிரானதும், கர்நாடகாவுக்கு ஆதரவானதும் ஆகும். இதுகுறித்து விவாதிக்க அவசரமாக அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். 
    சென்னையில் பா.ஜனதா தலைவர்களுடன் விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #SVeShekher #BJP
    சென்னை:

    காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 24 நாட்களாக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார். சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதனால் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை பாயும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கான எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் எஸ்.வி.சேகர் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார். எஸ்.வி.சேகரை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் சர்வ சாதாரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணனுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலை தளங்களிலும் கண்டன குரல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்கு அதிகாரத்தில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரே காரணம் என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #SVeShekher #BJP
    ×