search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    குஷ்பு வருகைக்கு எதிர்ப்பு: நெல்லையில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு

    நெல்லையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்த நடிகை குஷ்புக்கு நெல்லை கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை நடைபெறும் ஐம்பெரும் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் வந்தார்.

    இந்நிலையில் நடிகை குஷ்பு வருகைக்கு நெல்லை கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முறைப்படி தலைமைக்கும், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசுக்கும் தகவல் தெரிவிக்காமல் குஷ்பு வருவதாககூறி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று பூட்டு போட்டனர்.

    மேலும் அங்கு குஷ்பு வருகைக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டிகளும் ஓட்டியுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-


    ‘நடிகை குஷ்பு காங்கிரஸ் நிர்வாகிகளை மதிக்கவில்லை. அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். அவர் கலந்து கொள்ளும் ஐம்பெரும் விழா குறித்து எங்களுக்கு அழைப்பு இல்லை. அகில இந்திய அளவில் பொறுப்பில் இருக்கும் குஷ்பு இதுபோன்று தன்னிச்சையாக செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல’ என்றார்.

    இதற்கிடையே நெல்லை வந்த குஷ்புவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நெல்லை வந்த உங்களை முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்க வரவில்லையே? காங்கிரஸ் அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு குஷ்பு பதிலளிக்கையில் ‘நான் காங்கிரஸ் கட்சியை வளர்க்க நினைக்கிறேன். ஆனால் அவர்கள் வளரக்கூடாது என நினைக்கிறார்கள். சிலர் நாற்காலியை தக்கவைப்பதற்காக பட்ஜெட்டை வரவேற்று பேசுகிறார்கள்’ என்றார்.
    Next Story
    ×