search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சென்ட்ரலில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்
    X

    சென்னை சென்ட்ரலில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

    சென்னை சென்ட்ரலில் அய்யாக்கண்ணு தலைமையில் ஏர்கலப்பையுடன் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    இந்த நிலையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும், 60 வயது நிறைவடையாத விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 22-ந்தேதி 29 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.


    அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் இன்று சென்னை திரும்பினார்கள்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் வந்திறங்கிய அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அய்யாக்கண்ணு கூறும்போது, விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 மாதம் அவகாசம் கேட்டிருந்தார். மூன்று மாதங்கள் கடந்த பிறகும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே முதல்வரை சந்திக்க பேரணியாக செல்ல விருப்பதாக கூறினார்.

    அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ரெயில் நிலையத்துக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அரை நிர்வாணத்துடன் கலப்பை, கழுத்தில் மண்டை ஓடு மாலைகளுடன் அமர்ந்து இருந்தார்கள். இந்த போராட்டம் காரணமாக ரெயில்வே மற்றும் தமிழக போலீசார் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×