search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளித்தலை: பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்
    X

    குளித்தலை: பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம்

    பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி குளித்தலையில் விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    குளித்தலை:

    குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க குளித்தலை ஒன்றிய செயலாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த இச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தில், விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும், மின் இணைப்பு கேட்டு பதிந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கவேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை தனியார் வங்கி நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் பொதுத்துறை வங்கி மூலம் அமல்படுத்த வேண்டும்.

    கடுமையான வறட்சியால் வாழமுடியாத நிலையில் உள்ள சிறு மற்றும் குறு கோவில் நில குத்தகை விவசாயிகளின் குத்தகை பாக்கி அனைத்தையும் ரத்து செய்யவேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அனைத்து பாசன வடிகால் வாய்க்காலை தூர்வாரவேண்டும், பேரூராட்சி பகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக குளித்தலை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 27 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடவூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு முன் தரகம்பட்டி பஸ் நிலையத்தில் கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இலக்குவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, வேல்முருகன் ஆகியோர் பேசினார்கள்.

    இந்த போராட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும். மாயனூர் வாய்க்காலில் இருந்து பஞ்சப்பட்டி, தோகைமலைக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும். பொன்னணியாறு அணையில் இருந்து முள்ளிப்பாடி, மாவத்தூர் ஏரிக்கு வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    Next Story
    ×