search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது என தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறோம்” என்று அறிவித்துள்ள அ.தி.மு.க.வின் “குதிரை பேர” ஆட்சியில் தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சங்களிலும் தமிழகம் கடும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய கவலையளிக்கிறது.

    ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் தமிழகம் பெற்றிருந்தாலும், “குதிரை பேர” ஆட்சியின் மோசமான நிர்வாகத்தாலும், எங்கும் நிரம்பி வழியும் ஊழலாலும் தொழில் முதலீடு செய்வதற்கோ, தொழிற் சாலைகளை உருவாக்குவதற்கோ தமிழகம் ஏற்ற மாநிலமல்ல என்ற அசாதாரணமான சூழலை 2011லிருந்து இன்றுவரை அ.தி.மு.க. ஆட்சி உருவாக்கி விட்டது.

    சமீபத்தில் வெளிவந்துள்ள பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.ஏ. இ.ஆர்) ஆய்வில் தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆறு முக்கிய அம்சங்களில் (நிலம், உட்கட்டமைப்பு, தொழிலாளர், பொருளாதார சூழல், தொழில் செய்வதற்கான சூழல், நிர்வாகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை) தமிழகம் மற்ற மாநிலங்களுடன் போட்டி போட முடியாத மாநிலமாக மாறி ஆறாவது இடத்திற்கு சென்று விட்டது என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆறு அம்சங்களில் மிக முக்கியமான “தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் நிலவும் மாநிலம்” என்ற அம்சத்தில் நாட்டில் உள்ள மாநிலங்களில் 17-வது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்ட கொடுமை இந்த “குதிரை பேர” ஆட்சியில் நிகழ்ந்து விட்டது.

    2 லட்சத்து 22 ஆயிரத்து 569 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற்சாலைகள் அமைக்க 2006-2011 ஆட்சிக் காலத்தில் மட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ஆனால் மாநிலத்தின் இந்த அருமையான சூழ்நிலைகளை எல்லாம் சீர்குலைத்து, தொழில் தொடங்குவதற்கான அனைத்து அளவுகோலிலும் இன்றைக்கு தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு “ஊழலும்” “கமி‌ஷனுமே” தங்களின் ஒரே பணி என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் குதிரை பேர அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குதிரை பேர ஆட்சியின் பேரழிவிலிருந்து தமிழகத்தை மீட்கும் ஜனநாயகப் போரில் ஏழரைக் கோடி தமிழர்களும் மிகுந்த ஆர்வத்துடன், மாநிலத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    Next Story
    ×