என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும்.
    • 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதியை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர்.

    * 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    * எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை.

    * மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    * தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

    * 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும்.

    * தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.

    * மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

    * தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • காவல் ஆணையத்தின் அறிக்கை கடந்த ஜனவரி 3-ஆம் நாள் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்தியாவின் சிறந்த காவல்துறை தமிழக காவல்துறை தான் என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மத்தியக் காவல் படைகள் மற்றும் பிற மாநிலங்களின் காவலர்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது என்றும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஐந்தாவது காவல் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை வழங்குவதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாம் காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி தான் ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்தியக் காவல்படை, பிற மாநில காவல் படைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாக இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.18,200 - ரூ.52,900 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை குறைந்தபட்சம் ரூ.21,700 - 69,100 என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும்; காவலர் தேர்வின்போது, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தான் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான காவலர் நலத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை காவல் ஆணையம் வழங்கியுள்ளது. அவை அனைத்தும் மிகவும் நியாயமான பரிந்துரைகள் ஆகும்.

    காவல் ஆணையத்தின் அறிக்கை கடந்த ஜனவரி 3-ஆம் நாள் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் இன்று வரை 54 நாட்கள் நிறைவடைந்து விட்டன. காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து இந்தக் கால இடைவெளியில் உறுதியான மற்றும் தெளிவான முடிவுகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆணையத்தின் அறிக்கையை பரிசீலனைக்குக் கூட தமிழக அரசு இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறையினரின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் ஐந்தாம் காவல் ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதன் பதவிக்காலம் 6 மாதங்கள் என்று தான் அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், அடுத்தடுத்து கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, மூன்றாம் ஆண்டு நிறைவடையப் போகும் தருணத்தில் தான் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காவல் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்வதற்கே இரண்டரை ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால், தமிழக அரசோ, ஆணையத்தின் அறிக்கையை கிடப்பில் போடுவதற்கு தான் ஆர்வம் காட்டுகிறது. அப்படியானால், ஐந்தாம் காவல் ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்? இது காவலர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் இல்லையா?

    இந்தியாவின் சிறந்த காவல்துறை தமிழக காவல்துறை தான் என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்கிறது. ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை விட தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. தமிழக காவல்துறையை மிகச் சிறப்பாக பராமரிக்கிறோம் என்ற பொய்யானத் தோற்றத்தை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு அதற்காக தலைகுனிய வேண்டும். இனியும் வெற்று வசனங்களை பேசிக் கொண்டு இருக்காமல், காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர்

    இந்தியை திணிப்பதாக ஒன்றிய அரசை கண்டித்து 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாணவரணி அறிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    கல்வி நிதியை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசுக்கு நிபந்தனை விதிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர்

    மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்தும், கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலும் ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி, திராவிடர் மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

    • இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் மலை அடி வாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.

    இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறினர். 4 முதல் 5 மணிநேரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்

    நாளை (26-ந் தேதி) இரவு சிவராத்திரி நாளை மறுநாள் மாசி மாத அமாவாசையை (28-ந் தேதி) முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். இதை யொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    சிவராத்திரைய முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

    • 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    மாநில உரிமைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள்.
    • காளியம்மாளின் அதிரடி பேச்சுக்கள் அரசியல் களத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். சமூக செயற்பாட்டாளராக இருந்தவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 6 மாதமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    கனத்த இதயத்துடன் வெளியேறியதாக கூறியவர் அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை.

    காளியம்மாளின் அரசியல் அதிரடி பேச்சுக்கள் அரசியல் களத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும்.

    எனவே அவரை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

    விரைவில் ஏதாவது ஒரு கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் காளியம்மாளின் கருத்தை அறிவதற்காக பலரும் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.

    • தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
    • தாயகம் வேறு; தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.

    பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

    தாயகம் வேறு; தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது;

    மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு ஆகிய காரணங்களால் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் பனி பொழிந்தாலும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே 95 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்து வந்தது.

    எப்போதும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரி மாதத்திலேயே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.

    பல்வேறு நகரங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கு ஏற்றார் போல் ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் மத்தியிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இதுவரை 95 டிகிரி செல்சியஸ் பதிவாகி வந்த நிலையில் நேற்று தமிழகத்தில் முதல்முறையாக கோடை வெயில் தொட ங்கும் முன்பே ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் காரணமாக எப்போது பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டுச்சிலை, ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்ற பகுதிகளில் மதிய நேரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.

    இதேப்போல் மோர், இளநீர் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலைக்கு செல்லும் இளம்பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் குடைகளை பிடித்த படியும், முகத்தை துணியால் முடியும் செல்வதை காண முடிகிறது.

    கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியதால் ஈரோடு மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இன்னும் போக போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என அச்சத்தில் உள்ளனர்.

    • ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.
    • ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலந்துகொண்டு பேசியதாவது:-

    உசிலம்பட்டி பகுதி மக்கள் எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் கட்சிக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து வெற்றி பெறச் செய்தவர்கள் உசிலம்பட்டி மக்கள் தான். ஏழை, எளியோருக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    ஆனால் தி.மு.க. இன்று மக்களை கசக்கி பிழிகிறது. ஆட்சிக்கு வந்த இந்த 46 மாதத்தில் எதையும் செய்ய வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னணி திட்டமாக இருந்தது.

    காவிரி, முல்லைப் பெரியாறு நதிகளுக்கு மிகப் பெரிய தீர்வை பெற்றுத்தந்து மத்திய அரசிடமிருந்து நிதியை முறையாக பெற்று சிறப்பு திட்டங்களையும் தமிழகத்தின் உரிமைகளை யும் நிலைநாட்டினார்.

    தி.மு.க. மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பாதிப்படைகின்றனர்.

    தினந்தோறும் ஜாதி அடிப்படையிலும், மொழி ரீதியிலும் வன்முறைகள் தான் தொடர்கிறது. பாலி யல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி காலத்தை நகர்த்தி அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என தி.மு.க.வினர் பகல் கனவு காண்கின்றனர். அதை முறியடிக்க வேண்டும். தமிழகத்தை அ.தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என மக்கள் நம்புகி றார்கள்.

    ஜெயலலிதாவின் மறை விற்கு பிறகு அ.தி.மு.க. பல நெருக்கடி சவால்களை சந்தித்தது. இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலி தாவின் கனவை கோடிக்கணக்கான தொண்டர்கள் மனதில் தாங்கி நிற்கிறார்கள்.

    அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியா கும். விருப்பு, வெறுப்புகளை மறந்து பொதுநலத்துடன் செயல்பட வேண்டும்.

    ஜெயலலிதா என்னும் நான் என்று, நம் தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ இந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வாக வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.

    தமிழக மக்களின் நம்பிக்கையும் இது தான். அனைவரும் ஒன்றிணை வோம், வென்று காட்டு வோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வருகிற காலம் பொற்காலமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைக்கச் செய்து வெற்றி பெற வைப்பதே எனது லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும்.
    • சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைக்கிணறு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசியதாவது:-

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வரப்போகிறது என்றால் என்ன பொருள்? 2026 தேர்தலில், ஆட்சியிலே அதிகாரத்திலேயே பங்கு பெறக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் வலிமை பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும். திருமாவளவன் முதலமைச்சராக வர வேண்டும். இதுதான் நமது கனவு. தலைவர் ஒருநாள் நிச்சயம் முதலமைச்சராக வருவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    1990-ம் ஆண்டு தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றும் போது இந்த கொடி விரைவில் கோட்டையில் பறக்கும் என்றார். இப்போது நாம் கோட்டைக்கு நமது கொடி கட்டி தான் செல்கிறோம். கோட்டைக்குள் கொடி கட்டிக் கொண்டு செல்லும் இயக்கமாக நமது இயக்கத்தை மாற்றியுள்ளார் நமது தலைவர்.

    ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் நமது கனவு என அம்பேத்கர் கூறியுள்ளார். அனைவரையும் இணைத்துச் செல்ல வேண்டும். சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

    இன்று புதிதாக கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க வேண்டும். அதை மனப்பாடம் செய்து விட்டு ஓட்டு கேட்பது போல் நின்று விட்டு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகை யிட்டு பெரியார் ஆதரவு இயக்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். சீமான் வீட்டு அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ராயப்பேட்டை பகுதியில் வைத்து சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு திட்டமிட்ட 10 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியார் பற்றிய சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்யும் வகையிலேயே அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்டமிட்டதாக போலீசில் சிக்கியவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நீலாங்கரையில் சீமான் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ), பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.

    அதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காணும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக புதுக்கோட்டை இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மட்டுமே முழு அளவில் இயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சில வகுப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

    ×