என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
    • தொகுதி மறுவரையறைக்கு எதிரான உறுதிப்பாட்டில் ஒன்றிணைந்துள்ள அனைத்து முதல்வர்கள், தலைவர்களை வரவேற்கிறேன்.

    முதலமைச்சருர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்.

    தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்கள் கூட்டாட்சியை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.

    தொகுதி மறுவரையறைக்கு எதிரான உறுதிப்பாட்டில் ஒன்றிணைந்துள்ள அனைத்து முதல்வர்கள், தலைவர்களை வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் அவர் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தலையில் பலத்த காயத்துடன் காளிதாஸ் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர்.

    அதில் தலையில் ரத்த காயம் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே காளிதாசின் சகோதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
    • அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

    இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்,

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று உள்ளது. மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.

    • ugcampc@gmail.com என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
    • அங்கீகாரம் இன்றி உயர் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகளை கற்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் பெற வேண்டும். இருப்பினும், யு.ஜி.சி.யின் சட்ட விதிகளுக்கு முரணாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிப்பதாக பல்கலைக்கழக மானியக்குழுவின் கவனத்திற்கு சென்றது. யு.ஜி.சி.யின் அங்கீகாரம் இன்றி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள், உயர்கல்வி எனும் அங்கீகாரமற்றது. மேலும், அது, வேலை வாய்ப்பிற்கும் தகுதியாகாது என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.

    எனவே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள், யு.ஜி.சி.யின் www.ugc.gov.in என்ற இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், போலி கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

    யு.ஜி.சி. சட்ட விதிகளுக்கு முரணாக உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அங்கீகாரம் இன்றி உயர் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

    • குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, தென்காசியில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
    • 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதல்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 7.9.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.

    பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.

    மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26-ம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க ஏதுவாகவும், மேலும் இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகளும் பயன்பெறும் வழியில், இதர 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவுபடுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31.3.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30.6.2025 வரை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.
    • கோவிலில் இருந்த ரசிகர்கள் ஸ்ரீகாந்த் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

    • 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர்.

    கோவை:

    சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலை பகுதிகளில் 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கையகப்படுத்த தேவையான நிலங்கள் சர்வே செய்வது, நிலத்திற்கு கீழ் உள்ள சேவைகள் என்னென்ன என்பதை அறிவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.

    இந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் தொடங்கியுள்ளது.

    மெட்ரோ ரெயில் இயங்க உள்ள 2 வழித்தடங்களிலும் நிலத்துக்கு கீழ் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் கியாஸ் குழாய்கள், மின்புதை வடம், தொலை தொடர்பு வயர்கள் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குழுவினர் சரியாக பணிகளை செய்கிறார்களா என, மெட்ரோ ரெயில் நிறுவன துணை மேலாளர் கோகுல், உதவி மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஆனதால், பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இருப்பினும், ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
    • எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    மானியக் கோரிக்கையில் விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப்போகிறார், எப்போது வழங்கப்போகிறார் என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்த நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

    ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?

    எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு? நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்?

    மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.
    • அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

    2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

    இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

    அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.

    சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.

    தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வந்தடைந்தார்.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் அவுரைவரவேற்றனர்.

    பின்னர், தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

    அவரை, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்

    தொடரந்து, நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    ×