என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு.
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.

    இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மழைநீர் வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்படுவதுடன், போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    சாயர்புரம் வட்டார பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
    • தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல தசாப்தங்களாக, இங்குள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் நாங்கள் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் மூலம் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தோம்.

    * வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை தொடர்ந்து அனுபவித்தாலும், தமிழ்நாடு பொறுப்புடன் செயல்பட்டது. இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம். ஆனால் இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம் என்றார். 



    • கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    • வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

    சிவகிரி:

    சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.

    தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.

    தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.

    வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
    • விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது

    நாகர்கோவில்:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.

    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.

    காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.
    • மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல மொழி, இனம் என பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களில் இருந்து இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.

    * கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

    * இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது.

    * இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.

    * ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது.

    * மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும்.

    * தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்.

    * தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.

    * மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும்.

    * மணிப்பூர் மக்களின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார். 

    • தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.
    • தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை.

    சென்னை:

    தமிழக அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க.வினர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பனையூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

    * யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    * தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார்.

    * தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.

    * 4 முறை கேரளாவுக்கு சென்றபோதிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட மாநில பிரச்சனை குறித்து பேசவில்லை.

    * அணை கட்டியே தீருவேன் என டி.கே.சிவக்குமார் பேசியதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என கூறும் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரியிடம் கேட்கட்டும்.

    * தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம்.

    * தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப்போவதில்லை என்றார். 

    • இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.
    • தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும்.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு கடந்த 7-ந் தேதி ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே புதிய கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள கேரள பிரதிநிதிகளை நீக்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று லோயர்கேம்பில் இருந்து பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்கள் எதிர்ப்பையும் மீறி புதிய கண்காணிப்பு குழு அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழக விவசாயிகள் தடையை மீறி முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்குள் சென்று போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் திட்டமிட்டபடி புதிய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இன்று முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வந்தனர். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தபிறகு தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்களா? என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தையும் மீறி புதிய கண்காணிப்பு குழு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பேச உள்ளனர்.
    • அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது.

    இக்கூட்டத்தில் கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.



    கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பேச உள்ளனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    முன்னதாக, ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ள தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 



    • கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மாணவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார்.

    இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இந்த பேராலயத்தில் கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவகாலத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கலந்து கொண்டனர்.

    • நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
    • குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து கொலைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல் துறையினரின் பணியை முறைப்படுத்தி, போதைப்பொருட்களை ஒழித்து, மாணவர்கள், இளம் சமுதாயத்தினர், மகளிர், முதியோர் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    ×