பாம்பனை சேர்ந்த 14 மீனவர்களுக்கு தலா ரூ.4½ லட்சம் அபராதம்- மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு

மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பாம்பனை சேர்ந்த 14 மீனவர்களுக்கு தலா ரூ.4½ லட்சம் அபராதம்- மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com