என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உதகையில் உள்ளவர்களை பார்த்தார் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.
    • கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.

    இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார்.

    இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மலைகளின் அரசியான உதகைக்கு வந்து இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    * திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் சூழ்ந்தது உதகை.

    * கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஊட்டியில் அரசு விழாவில் பங்கேற்கிறேன்.

    * உதகையில் உள்ளவர்களை பார்த்தார் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது.

    * நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது தி.மு.க.

    * தி.மு.க. ஆட்சியில் நீலகிரியின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * தி.மு.க. ஆட்சியில் தான் உதகை ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா மாளிகை, படுகர் நலச்சங்க கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    * இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவு சார்ந்த பாராளுமன்ற வாதி ஆ.ராசா

    * நீலகிரி மக்களின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் ஆ.ராசா.

    * கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    * நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது நீலகிரிக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார்.
    • ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவருடன் வேறு யாரும் வரவில்லை. பின்னர் அவர் தனியாக காரில் ஏறி சென்றார். முன்னதாக சென்னையில் தனது பயணம் குறித்து கூறும்போது அவர், திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை. அறிவிக்கப்படாத அவரது வருகை அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
    • இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

    கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்த தொடர் மழைக்கு சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 66.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.75 அடியாக உயர்ந்துள்ளது. 42 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது. 493 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. 238 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2966 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, போடி 1.2, கூடலூர் 2.8, பெரியாறு 0.2, தேக்கடி 0.4, சண்முகாநதி 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன.
    • ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 300 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில், முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரிய நிலையில் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
    • குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.

    • யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு நாளை (திங்கட்கிழமை) காலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதையொட்டி தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற யாகசாலை சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி மற்றும் தருமை ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் முழு வதும் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மங்கள இசையுடன் யாகங்கள் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தென்காசியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 5 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடக்கிறது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லேகசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்துகிறார்.

    காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் உள்ளிட்டோர் பூஜைகள் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களான ராஜகோபுரம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிட ஏதுவாகவும், பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளிலும், கோவில் வளாகத்திற்குள்ளும் நின்று கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு டிரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க வசதியாக கோவில் மற்றும் ரத வீதிகளில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து தென்காசிக்கு வரும் பக்தர்கள் ஆசாத் நகர் பகுதியிலும், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியும் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தென்காசி கோவில் மற்றும் வளாக பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வருகிறார்.
    • பிரதமர் மோடி ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு ருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் பிரதமர் ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.

    இந்த நிலையில், ராமேஸ்வரத்திற்கு வர உள்ள பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கருப்பு கொடிகளை கைப்பற்றி காங்கிரசாரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
    • பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.

    முக்கிய நிகழ்வான ஓலை சப்பரத்தில் கருட சேவை, கோரதம் புறப்பாடு ஆகியவை சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ராமநவமி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்... பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து, தேரானது 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர், உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ராமநவமி மற்றும் தேரோட்டத்தை யொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

    • முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார்.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    நேற்றும், இன்றும் அவர் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே மண்சரிவை தடுக்கும் வகையில், நடந்து வரும் மண் ஆணி அமைக்கும் பணியை நேற்று நேரில் பார்வையிட்டார்.

    தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். இரவு ஊட்டி விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார்.

    இன்று 2-வது நாளாக நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடர்ந்தார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளே சென்று, அதனை பார்வையிட்டார்.

    • 11 மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
    • திடீர் விருந்து நிகழ்ச்சி கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    சென்னை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார். இரவு சென்னையில் தங்கினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் விழுப்புரம் கோட்டத்தில் உள்ளடங்கிய கட்சியின் மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது.

    அதில், இன்று காலை 8.30 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் காலை விருந்து வழங்குவதாகவும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இன்று காலையில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாவட்டத் தலைவர்கள் சஞ்சீவி, பாஸ்கர், லதா சண்முகம், குமார், பாலாஜி, கிரி, நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், கபிலன், சாய் சத்யன், கிருஷ்ண குமார், தனசேகர், மனோகர் ஆகியோரும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

    இவர்களுடன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கோட்ட பொறுப்பாளர்கள் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் கட்சியினருடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார்.

    இந்த திடீர் விருந்து நிகழ்ச்சி அழைப்பு கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, "இன்று கட்சியின் தொடக்க நாள் ஆகும். எனவே அதை யொட்டி விருந்து கொடுப்பதாகவே நினைக்கிறோம்" என்றார்கள்.

    கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கட்சி கொடியேற்றினார். கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×