என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார்.
    • வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரையை அடுத்த கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் பகுதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மதுரை செல்லூர் அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்த வேலு மகன் கணேசன் (வயது 46) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படிக்கும் மகளும், 11-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

    இவர் சிம்மக்கல் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். பழக்கடையை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட் டியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் சுமார் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வட்டியும் பல வருடங்களாக கட்டி வந்துள்ளார். தொடர்ந்து வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வட்டி சரியாக கட்ட முடியாமல் பல நாட்களாக விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    அத்துடன் கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார். பெரும்பாலான வட்டியை செலுத்திய நிலையில் கடன் கொடுத்தவர் அடமான பத்திரத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.

    மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கணேசன், இன்று காலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் அருகே சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் பழக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.
    • கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவு கூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.

    இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.

    கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
    • உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி தொடர்பாக திருப்பூரில் 2 கட்சி நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூரில் இன்று அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது சீனிவாசன் கூறுகையில்,

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசிய வீடியோ முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதால் தான் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பிடிக்காதவர்களால் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.

    இரண்டும் சேர்ந்தால் தி.மு.க., காணாமல் போய்விடும் என்பதால் தான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பயப்பட வேண்டாம் என்று தான் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஏராளமான பயன்களை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள். பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாங்கள் அல்ல.

    இந்த முறை எங்கள் கூட்டணிக்கு அதிகபட்ச இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்கும். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி சாதாரண தொண்டரின் உணர்வு போல தான் பேசியுள்ளார். அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இருக்காது. அவர் அ.தி.மு.க., குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,

    சமூகவலைதளங்கள் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையான செய்திகளை முழுமையாக கொண்டு சென்றால் பிரச்சனை இல்லை. அதனை வெட்டி ஒட்டி போடும் போது தான் சிக்கல் எழுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்ற கருத்தை தான் நான் ஏற்பேன். கட்சி ஒற்றுமையாக உள்ள இடத்தில் தான் நான் இருப்பேன். எல்லோரையும் தாய் போல் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

    இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க., பின்னர் பழியை தூக்கி மற்றவர்கள் மேல் போட்டு விடுகின்றனர். எதிரியை வீழ்த்த அமைக்கப்பட்டதே தேர்தல் கூட்டணி. தேசியத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் கட்சியை வீழ்த்தவே இந்த கூட்டணி. அடிச்சு ஆடுவோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்களுக்கான கூட்டணி இது தான்.தி.மு.க., கூட்டணி குடும்பத்திற்கான கூட்டணி. அ.தி.மு.க.-பா.ஜ.க., கூட்டணி ஆட்சியின் போது தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

    • சாதி பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
    • கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்ற பெயர்களை மாற்ற வேண்டும்

    செங்குந்த முதலியார் சங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கம் தொடர்பான வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடத்தை நடத்துகிறார்கள். ஆனால் அந்தப் பாடம் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தின் பெயரில் சாதியில் உள்ளது. இது எப்படி நியாயமாகும்! என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதனால் கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால், சாதி பெயரை நீக்குவது குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இப்போது நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சங்கங்களில் உள்ள சாதி பெயரை நீக்குவது குறித்து பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சாதிப் பெயரை தொடர்ந்து சங்கங்கள் பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அந்த சங்கத்தின் பதிவை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாதியின் பெயரில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி.நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    அதன்படி சாதிப்பெயரை நீக்கி கல்வி நிலையங்கள் பெயர் பலகை வைக்க வேண்டும். ஒரு வேலை இதை செய்ய மறுத்தால் அந்த கல்வி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை, அங்கீகரிக்கப்பட்ட வேறு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும்.

    அதேபோல அரசு நடத்தும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி என்பதில் இருந்து இந்த ஆதிதிராவிடர் என்ற சாதி பெயரை நீக்க வேண்டும். வேறு சாதியின் பெயரில் அரசு பள்ளிக்கூடம் நடத்தினாலும் அந்தப் பெயரையும் நீக்க வேண்டும்.

    நன்கொடையாளர்கள் கல்வி நிலையங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயரில் இருந்த ஜாதியை நீக்க வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதன் பின்பு நீதிபதி, தற்போதுள்ள மாணவ சமுதாயம் பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அருவாளை எடுத்துச் சென்று ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர்.

    இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தார்.

    • கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
    • தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசவில்லை.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே அந்த வெற்றியை பெற்ற இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இவர்கள் போட்ட வழக்கில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதனால் அந்த கொண்டாட்டத்துக்காக நான் இங்கு வந்து முதலமைச்சரை சந்தித்தேன்.

    தேசிய அளவில் இந்த வெற்றியை நாம் மற்றவர்களுக்கும் பயன்படும்படி கொண்டாட வேண்டும்.

    தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசவில்லை. மேல்சபை எம்.பி. சீட் தொடர்பாக பேச வரவில்லை. அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
    • ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. வெப்பம் படிப்படியாக அதிகரித்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென்று கோடை மழை பெய்தது.

    சென்னையில் இன்று காலை வெயில் அடித்தப்படி இருந்தது. சுமார் காலை 9 மணியளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் சென்னையின் சில இடங்களில் மழை பெய்தது. பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. அதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மதுரவாயல், பூந்தமல்லி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதே போல் காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

    சென்னையில் கடந்த சில நாட்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தின் போது இருக்கும் சூழல் இன்று நிலவியது.

    திடீர் மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நிலவரப்படி சென்னை மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. வளசரவாக்கத்தில் 11 செ.மீ., சாலி கிராமம், நெற்குன்றத்தில் தலா 10 செ.மீ., மணலியில் 9 செ.மீ., பாரிமுனையில் 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 6 செ.மீ., அடையாறில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.
    • நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    * சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    * மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.

    * நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.

    * தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    • மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் செய்வதாக நெல்லை இருட்டுக் கடை ஓனர் கவிதா கூறியுள்ளார்.
    • இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார்.

    நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருட்டுக்கடை அல்வா விளங்கி வருகிறது. இந்த இருட்டுக்கடையின் உரிமையாளர் கவிதா சிங். இவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் நெல்லையில் வைத்து பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

    இந்நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தாயுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.

    இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து கனிஷ்கா கூறியதாவது;-

    எனக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று தாழையூத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் எனது கணவருடன் கோவையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார்.

    இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந்தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தடைந்தேன். பின்னர் மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் நெல்லை வீட்டிற்கு வந்து எனது தாயிடம், உன் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும் , நெல்லையில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும். இல்லை என்றால் நான் உன் மகளுடன் வாழ மாட்டேன் என்று மிரட்டி சென்றார்கள்.

    எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்தனர். பின்னர் வாட்ஸ்-அப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும், குறுஞ்செய்திகள் மூலம் என்னை மிரட்டுவது போன்ற செயல்களினால் எனது உயிருக்கும்,எனது பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவ சிலை நிறுவப்படும்.
    • தமிழ் அறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடமை செய்யப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விரிவாக பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். அதன்படி தமிழ் அறிஞர்களுக்கு ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும், எல்லை காவலர்களுக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.7,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

    கோவையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவ சிலை நிறுவப்படும். தமிழ் அறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடமை செய்யப்படும்.

    மதுரவாயல் வட்டம் குண்டலத்தில் திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும். தமிழ் தென்றல் வி.கல்யாண சுந்தரனாரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான குண்டலத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம், மார்பளவு வெண்கல சிலை நிறுவி அங்குள்ள நூலகம் மேம்படுத்தப்படும்.

    மொழி பெயர்ப்பாளர் ஜமதக்கிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத் தூண் நிறுவப்படும். கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாள் நவம்பர் 9-ம் நாளை தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

    குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும். இதே போல் இசை அரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூ.3 கோடி செலவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.

    கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் மார்ஷல் நேசமணியின் போர் படை தளபதியாக விளங்கிய குமரிக்கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டையொட்டி அவருக்கு நாகர்கோவிலில் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள நினைவரங்கங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாவட்ட, மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.

    அரசிதழில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம் வெளியிடுதல் உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வண்ணம் இணைய வழியில் அவை மேற்கொள்ளப்படும். இது ஜூலை மாதம் முதல் (கியூ ஆர் கோடு வசதியுடன்) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மும்பை-ஐதராபாத், பெங்களூரு-சென்னை, திருச்சி-சென்னை விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்று, கனமழையின் காரணமாக ஒவ்வொரு விமானமும் தரையிறங்குவதில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மும்பையில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் தரையிறங்க வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்து வருகிறது. 

    • மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
    • குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.

    சென்னை:

    கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார்.

    அந்த இளம்பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த ஐ.டி. நிறுவன பெண்ணுக்கு பஸ் கண்டக்டர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், செல்போனில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் புறப்பட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அதில் கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×