என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்முடிக்கு எதிராக பொதுநல மனு- விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு
- மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
- குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.
சென்னை:
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






