என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சில்லென்று மாறிய சென்னை- மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது
    X

    சில்லென்று மாறிய சென்னை- மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது

    • சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
    • ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. வெப்பம் படிப்படியாக அதிகரித்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென்று கோடை மழை பெய்தது.

    சென்னையில் இன்று காலை வெயில் அடித்தப்படி இருந்தது. சுமார் காலை 9 மணியளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் சென்னையின் சில இடங்களில் மழை பெய்தது. பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. அதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் திடீரென்று மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

    சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மதுரவாயல், பூந்தமல்லி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. அதே போல் காஞ்சீ புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

    சென்னையில் கடந்த சில நாட்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தின் போது இருக்கும் சூழல் இன்று நிலவியது.

    திடீர் மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நிலவரப்படி சென்னை மேடவாக்கத்தில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. வளசரவாக்கத்தில் 11 செ.மீ., சாலி கிராமம், நெற்குன்றத்தில் தலா 10 செ.மீ., மணலியில் 9 செ.மீ., பாரிமுனையில் 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 6 செ.மீ., அடையாறில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×