என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை இருட்டுக் கடையை எழுதிக் கொடுக்குமாறு மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் - ஓனர் புகார்
- மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் செய்வதாக நெல்லை இருட்டுக் கடை ஓனர் கவிதா கூறியுள்ளார்.
- இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார்.
நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக இருட்டுக்கடை அல்வா விளங்கி வருகிறது. இந்த இருட்டுக்கடையின் உரிமையாளர் கவிதா சிங். இவரது மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் நெல்லையில் வைத்து பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தாயுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து கனிஷ்கா கூறியதாவது;-
எனக்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று தாழையூத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் எனது கணவருடன் கோவையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தேன். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருந்து வந்தார்.
இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் கடும் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந்தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்தடைந்தேன். பின்னர் மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் நெல்லை வீட்டிற்கு வந்து எனது தாயிடம், உன் மகளுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும் , நெல்லையில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும். இல்லை என்றால் நான் உன் மகளுடன் வாழ மாட்டேன் என்று மிரட்டி சென்றார்கள்.
எனது பெற்றோர்களும் எனது எதிர்காலத்தை கருதி விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்தனர். பின்னர் வாட்ஸ்-அப்பில் தேவையற்ற அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்புவதும், குறுஞ்செய்திகள் மூலம் என்னை மிரட்டுவது போன்ற செயல்களினால் எனது உயிருக்கும்,எனது பெற்றோர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கணவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






